
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டமானது இன்று இரவு கௌஹாத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக இவ்விரு அணியின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் அணி இம்முறை ரியான் பராக்கின் தலைமையில் விளையாட இருக்கிறது. அதேவேளையில் முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தற்போது அந்த அணிக்கு எதிராக சி.எஸ்.கே அணியில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறார். இதன் காரணமாக இந்த மோதல் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரரான ரியான் பராக் நியமிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான குமார் சங்கக்காரா சில விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
கேப்டன் பதவிக்கு ரவீந்திர ஜடேஜா, சந்தீப் சர்மா உட்பட ஐந்து வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் வெறும் அனுபவத்தை மட்டும் பார்க்காமல் வீரர்களின் ஆளுமை, தகவல் தொடர்பு மற்றும் கடினமான சூழ்நிலையை சமாளிக்கும் விதம் என பல்வேறு வகையில் அதற்கு ஏற்ற கேள்விகளின் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலியை முந்தி சாதனையை நிகழ்த்திய ஹிட்மேன் ரோஹித் – விவரம் இதோ
அந்த நேர்காணலில் ரியான் பராக் காட்டிய முதிர்ச்சி மற்றும் தெளிவான சிந்தனை ஆகியவை அணி நிர்வாகத்தை கவர்ந்தது. அதுமட்டுமின்றி தவறை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ளும் அவரது பண்பு அவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. இதன் காரணமாகவே அவரை நாங்கள் கேப்டனாக தேர்வு செய்தோம் என சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.