
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் போட்டியானது நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ஃபர்கான் 40 ரன்களையும், ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களையும் குவித்தனர்.
இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர். அதனை தொடர்ந்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய குல்தீப் யாதவ் கூறியதாவது : நான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்னுடைய திட்டங்களை மிகவும் எளிமையாக வைத்திருந்தேன். அதாவது எனக்கு எதிராக இருக்கும் பேட்ஸ்மேன் எப்படி விளையாடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு என்னுடைய திட்டங்களை மாற்றி அமைத்தேன்.
நான் எப்பொழுதுமே விக்கெட் டேக்கிங் பால்களை வீசுவதில் கவனமாக இருப்பேன். அந்த வகையில் பேட்ஸ்மேன்களின் மனநிலையை புரிந்து அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் விக்கெட் எடுக்கும் பந்துகளாகவே வீசினேன். அதனால் என்னால் விக்கெட்டுகளை எளிதாக கைப்பற்ற முடிந்தது.
இதையும் படிங்க : நம்பர் ஒன் இந்தியாவின் உண்மையான கலர் அம்பலமாகிடுச்சு.. பாகிஸ்தானை அவமதித்தது பற்றி லதீப், அக்தர்
இருந்தாலும் என்னுடைய பந்துவீச்சில் நான் இன்னும் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அதேபோன்று இன்னும் நிறைய வேரியேஷன்களையும் என்னுடைய பந்துவீச்சில் கொண்டுவர முயற்சிக்கிறேன் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.