ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறித்து அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கேப்டன் ரகானே குல்தீப் யாதவை தேர்வு செய்யாதது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இந்திய பவுலிங் கோச் இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவிற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “ ஆஸ்திரேலிய தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் களமிறங்குவதற்கு நான் தயாராக இருந்தேன். அதிலும் இந்திய வீரர்கள் காயம் காரணமாக பிரிஸ்பேனில் இடம்பெறவில்லை. இதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். இதற்காக நான் என்னை தயார் செய்து கொண்டு சிறந்த மனநிலையுடன் இருந்தேன். அப்போது யாரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றது.
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்போது பேசப்பட்டது. நான் தயாராக இருந்தேன். ஆனால் பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறுதி டெஸ்ட் போட்டிக்கு களமிறங்கியது. இதுவும் நல்லதுதான்” என்று கூறியிருக்கிறார்.