இந்த பார்ம் போதுமா? முரட்டு பார்முக்கு திரும்பி சச்சின், ரோஹித் சாதனையை சமன் செய்த – குல்தீப் யாதவ்

Kuldeep Yadhav
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து பல த்ரில்லர் திருப்பங்களுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நிறைய இளம் இந்திய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக தங்களது திறமையை வெளிப்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 36 வயதைக் கடந்தாலும் தன்னம்பிக்கையுடன் இந்தியாவிற்காக மீண்டும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் கங்கணம் கட்டி எதிரணிகளை சொல்லி அடித்து வருகிறார். அந்த வகையில் சமீபகாலங்களில் “அவ்வளவுதான் முடிந்தது கதை” என்று அச்சிடப்படாத முத்திரை குத்தப்பட்ட குல்தீப் யாதவ் இந்த வருட ஐபிஎல் தொடரில் அபார எழுச்சி கண்டுள்ளதை பற்றி பார்ப்போம்.

Kuldeep Yadhav vs KKR 2.jpeg

- Advertisement -

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் 2017, 2018 போன்ற காலங்களில் கொல்கத்தா அணிக்காக மாயாஜால சுழல் பந்துகளை பிரயோகித்து விக்கெட்டுகளையும் வெற்றிகளையும் குவித்ததால் அதே காலகட்டத்தில் அதுவும் 3 வகையான இந்திய அணியிலும் முன்னணி சுழல் பந்துவீச்சாளராகும் அளவுக்கு உயர்ந்தார்.

வீழ்ச்சியும் எழுச்சியும்:
இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பைக்குப் பின் அவரின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதால் அந்த வருட ஐபிஎல் தொடரிலும் ஜொலிக்க தவறிய அவருக்கு 2020இல் பெரிய அளவில் வாய்ப்பு வழங்காத கொல்கத்தா அணி நிர்வாகம் 2021 சீசனின் முதல் பகுதியில் ஒரு வாய்ப்பு கூட வழங்காமல் அணிக்குள் ஒரு வேலைக்காரனை போல் தரம்தாழ்த்தி நடத்தியதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணியிலும் தனக்கான இடத்தை பறிகொடுத்த அவர் அதன்பின் துபாயில் நடைபெற்ற 2-வது பாகத்தில் காயத்தால் விலகினார்.

Kuldeep

அதன்பின் பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவரை கொல்கத்தா அணி நிர்வாகமும் கழற்றி விட்டது. இருப்பினும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் மீது நம்பிக்கை வைத்த டெல்லி அணி நிர்வாகம் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு வாங்கி முதல் போட்டியிலேயே வாய்ப்பையும் அளித்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திய அவர் மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று பார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

பழிக்கு பழி:
அத்துடன் கடினமான தருணங்களில் தன்னை மோசமாக நடத்திய தனது முன்னாள் அணியான கொல்கத்தாவுக்கு எதிராக ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்த போட்டியில் ஒருபடி மேலே சென்று அவர் 4 விக்கெட்டுகளை எடுத்து டெல்லியின் 44 ரன்கள் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று பழி தீர்த்தார். அதை தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் நேற்று மீண்டும் தனது முன்னாள் அணியான கொல்கத்தாவுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் டெல்லியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Kuldeep Yadhav vs KKR

ஆச்சரியப்படும் வகையில் இதுவரை டெல்லி பங்கேற்ற 8 போட்டிகளில் பதிவு செய்த 4 போட்டிகளிலும் குல்தீப் யாதவ் மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்து பழிதீர்த்த அவர் தன்னை நம்பி வாங்கிய டெல்லிக்கு 4 வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நம்பிக்கையின் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

பார்ம் போதுமா:
மேலும் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அவர் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து தன் மீதான விமர்சனங்களை துடைத்து பழைய ஃபார்முக்கு திரும்பியது மட்டுமல்லாமல் முரட்டுத்தனமான ஃபார்முக்கு முன்னேறி உள்ளார் என்றே கூறலாம்.

kuldeep 1

1. ஏனெனில் 2016 – 2021 வரையிலான தனது ஐபிஎல் கேரியரில் முதல் 44 போட்டிகளில் வெறும் 1 ஆட்டநாயகன் விருதை மட்டுமே வென்ற அவர் இந்த 2022 தொடரில் வெறும் 8 போட்டிகளிலேயே 4 ஆட்டநாயகன் விருதை வென்று மேஜிக் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

2. அதேபோல் முதல் 44 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே 4 விக்கெட் ஹால் எடுத்திருந்த அவர் இந்த வருடம் வெறும் 8 போட்டிகளில் 4 முறை 4 விக்கெட் ஹால் எடுத்து மிரட்டலான பார்முக்கு வந்துள்ளார்.

3. இப்படி இந்த வருடம் 8 போட்டிகளிலேயே 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 5 ஆட்டநாயகன் விருதுகள்
2. குல்தீப் யாதவ்/சச்சின் டெண்டுல்கர்/ரோஹித் சர்மா : தலா 4 ஆட்டநாயகன் விருதுகள்

இதையும் படிங்க : இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4 அணிகள் இவைதான் – டேனியல் வெட்டோரி கணிப்பு

4. மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற 2-வது இந்திய பவுலர் என்ற பெருமையை அமித் மிஸ்ராவுக்கு (2013இல்) பின் பெற்றுள்ளார். இப்படி அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் அசத்தும் அவர் இந்தியாவிற்காக மீண்டும் விளையாட “இந்த பார்ம் போதுமா” என்று இந்திய தேர்வுக் குழுவினரின் கதவையும் தட்டுகிறார்.

Advertisement