இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பிடித்து இருந்தாலும் அவருக்கு முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை தவிர்த்து மற்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர்.
குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு குடுங்க : சிறுவயது பயிற்சியாளர் வேண்டுகோள்
இந்நிலையில் முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு நான்காவது போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என அவரது சிறு வயது பயிற்சியாளர் கேட்டுக் கொண்டுள்ளார். போட்டி நடைபெற இருக்கும் மான்செஸ்டர் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு அவரை சேர்க்குமாறு சில விவாதங்களும் சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவரது சிறுவயது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டே கூறுகையில் : இந்த டெஸ்ட் தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணி இரண்டு தோல்விகளுடன் பின்தங்கியுள்ளது. எனவே அடுத்த போட்டியில் ஆல் ரவுண்டர்களை முழுவதுமாக நம்பாமல் குல்தீப் யாதவை சேர்த்தால் நிச்சயம் மாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன்.
நான் அவரிடம் சமீபத்தில் பேசிய போது : நீ வாய்ப்புக்காக தயாராக காத்திரு. உனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதில் நீ அசத்த வேண்டும். அதனால் எப்போதும் ஃபிட்டாக இரு, பயிற்சி செய்து கொண்டே இரு என்று கூறினேன். அவரும் வாய்ப்புக்காக தற்போது மிகச் சிறப்பாக தயாராகி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதேபோன்று நான் அவரிடம் பேசியதிலிருந்து அவர் இன்னும் மன உறுதியுடன் இருப்பதாகவும், வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அசத்த காத்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே அவருக்கு நான்காவது போட்டியிலாவது வாய்ப்பு கொடுங்கள்.
இதையும் படிங்க : இங்கிலாந்திடம் ஒரு வீக்னஸ் இருக்கு.. அதுக்காகவே சாய் சுதர்சனை கொண்டுவரனும் – இர்பான் பதான் ஆதரவு
இறுதியில் அவரும் ஒரு மனிதன் தான். சிறப்பான பார்மில் இருக்கும்போது அவரை பயன்படுத்துங்கள் என இந்திய அணி நிர்வாகத்திற்கு கபில்தேவ் பாண்டே வேண்டுகோள் வைத்துள்ளார். இருந்தாலும் அடுத்த போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகிய இருவர் மட்டுமே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



