அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக குருப் சுற்று போட்டிகளில் இருந்து தொடர்ச்சியாக 8 வெற்றிகளை தோல்வியையே சந்திக்காமல் பெற்ற இந்திய அணியானது இறுதிப் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்து வெளியேறி இருந்த வேளையில் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு தான் இந்த டி20 உலகக் கோப்பையை சமர்ப்பிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு. ஏனெனில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் காயமடைந்து பெங்களூரில் இருந்த போது ரோகித் சர்மா என்னிடம் : நீங்கள் எப்படி காயத்திலிருந்து மீண்டு வருவீர்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் திரும்பி வந்ததும் உங்களது பந்துவீச்சில் நான் கூறிய சில மாற்றங்களை பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார்.
அதோடு உலக கோப்பையின் போதும் எனக்கு பந்துவீச்சில் அற்புதமான திட்டத்தினை வகுத்து வழங்கி நான் சிறப்பாக செயல்பட காரணமாகவும் இருந்தார். டீம் மீட்டிங்கின் போது எப்போதுமே அணி வீரர்களை ஒன்றிணைத்து அணியின் ஒற்றுமைக்காக மட்டுமே தான் பேசுவார்.
இதையும் படிங்க : இலங்கை தொடரில் ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு.. அப்படின்னா கம்பேக் எப்போது? வெளியான தகவல்
எனவே அவரது இந்த சிறப்பான கேப்டன்சி தான் உலக கோப்பையை வெல்ல பெரிய காரணமாக இருந்தது. தனிப்பட்ட வகையிலும் அணிக்காகவும் அவர் பெரிய பங்களிப்பனை வழங்கி உள்ளார். எனவே அவருக்காக இந்த உலகக் கோப்பை வெற்றியை தான் சமர்ப்பிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.



