இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவும் இடம் பெற்றிருந்தார். இதன் காரணமாக நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குல்தீப் யாதவின் கரியருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : கபில் பாண்டே வருத்தம்
ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் அவருக்கு இடம் கிடைக்காத வேளையில் ஜூலை 23-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நான்காவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அறிமுக வீரராக அன்ஷுல் கம்போஜ் களமிறங்கியுள்ளது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குல்தீப் இதுவரை 13 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலராக பார்க்கப்படும் அவருக்கு இப்படி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை குல்தீப்க்கு வாய்ப்பு வழங்கப்படாதது அவரது கரியரை பாதிக்கும் என்று அவரது சிறு வயது பயிற்சியாளரான கபில் பாண்டே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : குல்தீப் யாதவ் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டும் இன்றி ரஞ்சி கோப்பையிலும் அண்மையில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இந்திய அணிக்காக எப்போதெல்லாம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் சிறப்பான செயல்பாட்டையே அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனால் அவரை போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் கூட மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டார். ஆனால் மிகச்சிறந்த லெக்ஸ் ஸ்பின்னரான குல்தீப் இதுவரை இந்திய அணிக்காக ஆடவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் சிபாரிசு இல்லாமல் வாய்ப்பினை பெற முடியாது என்று தெரிகிறது.
இதையும் படிங்க : 29 வயதான தமிழக வீரரை உடனடியாக இங்கிலாந்துக்கு அழைத்த இந்திய அணியின் நிர்வாகம் – விவரம் இதோ
ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தற்போதைய இந்திய அணியில் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இப்படியே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவரது கரியரும் காணாமல் போக வாய்ப்புள்ளதாக கபில் பாண்டே வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



