முதல் போட்டியில் தவற விட்டதை இந்த போட்டியில் பிடித்து பழி தீர்த்துக்கொண்ட க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

Rahim

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் க்ருனால் பாண்டியா தவறவிட்ட கேட்சினால் முஷ்பிகுர் ரஹீம் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் பங்களாதேஷ் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் க்ருனால் பாண்டியா ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்ய வந்த முஷ்பிகுர் ரஹீம் 4 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் வீசிய பந்தை தூக்கி அடிக்க அந்த பந்தை பவுண்டரிக்கு அருகில் இருந்த க்ருனால் பாண்டியா கச்சிதமாகக் கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்தவுடன் அவர் அந்த பந்தை தரையில் வைத்து சென்ற போட்டியில் விட்டதை நினைத்து சற்று ஆக்ரோஷமாக அவரது விக்கெட்டினை கொண்டாடினார்.

தற்போது க்ருனால் பாண்டியா பிடித்த இந்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முதல் போட்டியில் தவறவிட்டதை இந்த போட்டியில் பிடித்து பழிதீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் க்ருனால் பாண்டியாவின் இந்த சிறப்பான கேட்சை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் தொடரில் தற்போது 1-1 என்ற நிலையில் சமன் செய்தது. மேலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.