எனது இந்த அரைசதமும், பெருகி வந்த கண்ணீரும் உங்களுக்காக மட்டும் தான் – க்ருனால் பாண்டியா உருக்கம்

Krunal

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது.

Krunal

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அணியின் முக்கிய தருணத்தில், இக்கட்டான இறுதி நேரத்தில் அறிமுக வீரரான க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் விளையாடிய க்ருனால் பாண்டியா நேற்றைய போட்டியில் எந்தவித பயமுமின்றி இங்கிலாந்து வீரர்களை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

அதுமட்டுமின்றி அறிமுக போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் கடந்து அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக க்ருனால் பாண்டியா ஒரு உருக்கமான ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டது :

அப்பா நான் சந்தித்த ஒவ்வொரு பந்தின் போதும் நீங்கள் என்னுடனேயே இருந்தீர்கள். என்னுடைய மனதிலும் இதயத்திலும் நீங்கள் இருப்பதை உணர்ந்ததால் தான் என் கண்களில் நீர் பெருகியது. இந்த போட்டியின்போது ஒவ்வொரு பந்திலும் எனக்குப் பக்கபலமாக இருந்தமைக்கு நன்றி. இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் நான் உங்களை பெருமைப்படுத்தி உள்ளதாக நம்புகிறேன். நான் செய்யும் எல்லா விடயங்களும் உங்களுக்காக தான் அப்பா என அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அவருக்கு ஆறுதலாக ஹர்டிக் பண்டியா வெளியிட்டுள்ள பதிவில் : நிச்சயம் அப்பா உங்களை நினைத்து பெருமைப்படுவார். உங்களைப் பார்த்துப் புன்னகைப்பார். உங்களுக்கான பிறந்தநாள் பரிசும் அவர் முன் கூட்டியே தந்துள்ளார். உங்களால் இன்னும் நிறைய சாதிக்க முடியும். இந்த அரைசதம் உங்களுக்கானது அப்பா என நெகிழ்ச்சியாக பதிவு செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.