
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் இந்திய கிரிக்கெட் அணி முழு வீச்சில் தயாராகி வருகின்றது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வென்று இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகிறது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர் டி20 போட்டிகளில் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறிய சூரியகுமார் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றார். அதனாலேயே கேப்டனாகவும் பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகின்றது.
இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் மிகப்பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகிறார். கடந்த 12 மாதங்களில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ள அவர் தடுமாறுவது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்சமயத்தில் இந்திய அணிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் தான் கவலையளிப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் ஃபார்முக்கு திரும்ப சூரியகுமார் கேப்டன்ஷிப்பில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தாமல், அடிக்கடி பேட்டிங் வரிசையில் மாற்றாமல் ஒரு இடத்தில் நிலையாக விளையாடுமாறு ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் கவனம் செலுத்தி நேரம் எடுத்து விளையாட வேண்டும். அவர் அடிக்கடி தன்னுடைய பேட்டிங் இடத்தை மாற்றக்கூடாது. எடுத்துக்காட்டாக 3இல் களமிறங்கினால் அவர் அனைத்து நேரமும் 3வது இடத்தில் விளையாட வேண்டும்”
“டி20 உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில் அவர் ஃபார்முக்கு வருவது மிகவும் முக்கியமானதாகும். ஒரு கேப்டனாக, வீரராக சூரியகுமார் எந்த அணியிலும் இருப்பார். ஆனால் அவருடைய ஃபார்ம் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. அணிக்கு வெளியே இருப்பவர்கள் மட்டுமின்றி சூரியகுமாரே தன்னுடைய ஃபார்மை பற்றி கவலைப்படுவார்”
இதையும் படிங்க: நியூசி அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தேர்வுக்கு முன்னதாக ஸ்பெஷல் ஆட்டத்தை வெளிப்படுத்திய – ருதுராஜ் கெய்க்வாட்
“நீண்ட காலமாக நாம் ஏன் ஸ்கோர் அடிக்கவில்லை என்பதை அவர் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை அவர் அதிகமாக கேப்டன்ஷிப் பொறுப்பில் கவனம் செலுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவர் அதை செய்யக்கூடாது. அவர் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அதை செய்தாலே கேப்டன்ஷிப் அவருக்கு தாமாக நன்றாக வரும். ஏனெனில் அவர் நல்ல கேப்டன்” என்று கூறினார்.