பிசிசியின் புதிய தலைவராக கடந்த புதன்கிழமை அன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்புக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல மட்டங்களில் சிறப்பாக செயல்பட தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவுகிறது.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அவருக்கும் கங்குலிக்கும் இடையேயான உறவு குறித்தும் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கோலி கூறியதாவது : முன்பும் நான் கங்குலியுடன் கிரிக்கெட் குறித்து பலவிடயங்களை கலந்து ஆலோசித்து உள்ளேன். நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேச கிடைக்கும் வாய்ப்பின் போது எல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றி பேசியுள்ளோம்.
மேலும் இந்திய அணியின் மேம்பாடு குறித்து எங்களுக்கு இடையேயான உரையாடல் எப்போதும் ஆரோக்கியமான ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் பிசிசிஐ புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் நிறைய விஷயங்களை நான் பேச உள்ளேன். அதற்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இந்திய அணிக்கு என்னென்ன தேவை என்னென்ன விஷயங்கள் முக்கியமானவை நாம் எவ்வாறு அணியை முன்னே முன்னேற்ற வேண்டும் மேலும் எந்தெந்த காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி பல விடயங்கள் என்னிடம் உள்ளன.
அதனை பற்றி அவரிடம் நான் நிச்சயம் கலந்து ஆலோசித்து அதற்கான விவாதத்தை கொண்டுசென்று பின்பு அவரிடம் என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பேன். மேலும் அவர் புதிய தலைவராக இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். ஏனெனில் அவர் ஒரு கிரிக்கெட் வீரராகவும் மற்றும் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளதால் நான் சொல்வதும் அவருக்கு எளிமையாகத் தெரியும் எனவே இந்திய அணி நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.