
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார். துவக்க வீரர்களான ராகுல் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதனை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 53 ரன்களும், சைபர்ட் 50 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பும்ரா ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாக ராகுலும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்தத் தொடர் முழுவதும் எங்களது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது ஆட்டம் நிச்சயம் பெருமைப்படும் அளவில் இருந்தது. நாங்கள் எப்பொழுதும் மைதானத்தில் வெற்றியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டோம். இறுதியில் வெற்றி அனைத்து போட்டியிலும் கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்றாகும். ரோஹித் இன்று அடைந்த காயம் எதிர்பார்க்காத ஒன்றாகும். நம் அணியில் இளம் வீரர்கள் சூழ்நிலையை புரிந்து அழுத்தத்தை ஏற்று விளையாட தயாராகிவிட்டார்கள்.
அதுவே போட்டியை நான் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சிறப்பாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இளம் வீரர்கள் விளையாடும் விதம்தான். அணி அவர்களிடமிருந்து 120 சதவீத உழைப்பை எதிர்பார்க்கிறது என்று அவர்கள் தெரிந்து உள்ளனர். எனவே அவர்கள் வெற்றிக்கான வழியை தேடி சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இதுவே இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றமாகும் அதற்கான முடிவுகள் தற்போது சிறப்பாக வருகின்றன என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.