உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாட்டிலும் நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் தொடரும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு துவங்க இருந்த ஐபிஎல் தொடரில் தற்போது காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இன்றி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் அடுத்து எப்போது கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக இனி வரும் நாட்களில் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் நடத்த எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் இது குறித்த இறுதி நிலை எப்போது வெளியாகும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு போட்டிகள் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறுகையில் : ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது என்பது எதிர்காலத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது.
ஆனால் அதனை அனைவரும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது மட்டுமே எனக்கு இன்னும் தெரியவில்லை. மேலும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்பு விளையாடி பழகிய நாம் இனி வரும் போட்டிகளில் ரசிகர்கள் என்று எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. வீரர்கள் போட்டிகளில் விளையாடும்போது ரசிகர்கள் இருந்தால் அதில் தீவிரம் காட்டுவார்கள்.
அதேநேரம் ரசிகர்கள் வீரர்கள் தொடர்பின்றி விளயாடினால் பதட்டம், பயம் அழுத்தம் உள்ளிட்ட அந்த உணர்வினை மீண்டும் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல இருப்பது உறுதி. ஆனால் அதில் என்ன சந்தேகம் என்றால் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் உள்ள சூழ்நிலையால் ஏற்படும் மேஜிக்கை காலி மைதானங்களில் நாம் உணர முடியாது என்பதுதான், இந்த மேஜிக் இல்லாமல் நாங்கள் எவ்வாறு விளையாட முடியும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது