இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துவக்க வீரரான ரோகித் சர்மா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ரோஹித் சர்மா வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரோஹித் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகள் மற்றும் 108 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையும் தன்வசம் வைத்துள்ளார்.
இப்படி அதிரடியில் அசத்திவரும் ரோஹித் கிரிக்கெட் ரசிகர்களால் அதிரடி மன்னனாகவும், ஹிட்மேன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதம் மற்றும் டி20 போட்டிகளில் 4 சதம் என இவரின் சாதனையை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் எட்ட முடியாத சாதனையாக அவரது மூன்று இரட்டை சதங்கள் பார்க்கப்படுகின்றன.
இப்படி சாதனைகள் ஒரு பக்கமிருக்க ரோகித் சர்மாவின் வேடிக்கையான மறுபக்கத்தை தற்போது கோலி தெரிவித்துள்ளார். அதாவது ரோகித் சர்மா இந்திய அணியில் சரியான ஞாபக மறதி உள்ள வீரர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனெனில் ஐபேட், பாஸ்போர்ட், திருமண மோதிரம் என அனைத்தையும் மறந்து வைத்து விடுவார் என்றும் அதனை தான் சுட்டிக் காண்பித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விரிவாக கூறுகையில் : ரோகித் சர்மா மறந்து வைக்கும் பொருட்களை வேறு யாரும் எடுத்து வைத்து நான் பார்த்ததே இல்லை. அதிலும் குறிப்பாக தினமும் அவர் பயன்படுத்தும் பொருட்களைக் கூட அவர் மறந்து விடுவார். ஹோட்டலை விட்டு பஸ் பாதி தூரம் சென்ற பிறகு நான் அதை மறந்து வைத்து விட்டு வந்துள்ளேன் என்று பலமுறை கூறியிருக்கிறார். சில நேரம் அவர் பாஸ்போர்ட்டை கூட மறந்து விட்டு வந்துள்ளார். அதற்காகவே கிளம்புவதற்கு முன்னால் ரோஹித்தின் மேனேஜர் எல்லா பொருட்களையும் எடுத்துவிட்டீர்களா ? என்று கேட்பார். ஆம் என்ற பதில் வந்த ரோஹித்திடம் இருந்து வந்த பின்புதான் பஸ்ஸே கிளம்பும்.
அந்த அளவுக்கு ரோகித் சர்மா இந்திய அணியில் ஒரு கஜினி போன்றவர் இந்த ஞாபக மறதி விஷயத்தை ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்டுள்ளார். ஒருமுறை ஹோட்டலிலிருந்து தாமதமாக கிளம்பியதால் அவசர அவசரமாக வெளியேறியதன் பின்னர் போகும் வழியில் சக வீரரான உமேஷ் யாதவின் விரலில் உள்ள மோதிரத்தை பார்த்து அவரின் திருமணத்தை ஹோட்டலிலேயே வைத்துள்ளதாகவும் அதனை எடுத்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதற்குப்பின் ஹர்பஜன் சிங்கிடம் கூறி யாராவது ஹோட்டலுக்கு சென்றால் அந்த மோதிரத்தை பத்திரமாக எடுத்து வைக்கும்படி கூறியுள்ளார். இவரை அதிரடி ஆட்டக்காரராகவும், பந்துவீச்சாளர்களை சிதறவிடும் ஒரு சரவெடியாய் பார்த்த நமக்கு ரோஹித்துக்கு இப்படி ஒரு ஞாபகமறதி உள்ளதா என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். மேலும் இந்த பிறந்த நாளன்று அவருக்கு இப்படி ஒரு குணாதிசயம் இருப்பது ரோகித் சர்மாவின் ரசிகர்கள் சற்று புன்னகையோடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ரோஹித் மற்றும் ரித்திகா ஆகியோருக்கு காதல் திருமணம் நடைபெற்று சமைரா என்கிற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. மேலும் சச்சின் விட்டுச்சென்ற இடத்தை அப்படியே கவர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை இந்திய அளவில் பிரபலப்படுத்தி உள்ள ஒரு வீரராக ரோகித் சர்மா விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.