இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி ஐசிசி நடத்தும் கோப்பைகளை வெல்லவில்லை என்று ஒரு குறை மட்டுமே உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டனாக அவர் தனது சிறப்பான அர்ப்பணிப்பை வழங்கி வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி அணியை வழிநடத்திய முறையிலும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும், அணி வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள், தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய அணி வெற்றி பெற பிராத்தித்த ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றிகள்.
நீங்கள் அனைவருமே எனக்கு பக்கபலமாக இருந்து உள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கடந்த 8-9 வருடங்களாக நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறேன். அதுமட்டுமின்றி 5-6 வருடங்களாக அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியை திறமையாக வழி நடத்தவே டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன்ஷிப்பை துறக்க முடிவு செய்துள்ளேன்.
இருப்பினும் நான் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்ஸ்மேனாக தொடர விரும்புகிறேன். இந்த முடிவை எடுக்க எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். குறிப்பாக எனக்கு மிகவும் நெருக்கமான பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோகித் சர்மாவுடன் பேசிய பிறகே நான் இந்த முடிவை எடுத்தேன்.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் விரும்புவதாக கோலி அந்த பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



