சமீப காலமாக இப்படியொரு பந்துவீச்சை கண்டது இல்லை..! டெஸ்டிலும் குல்தீப் வாய்ப்பு..? – கோலி சூசகம்..!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டி20 தொடரில் கலக்கிய குல்தீப் யாதவ், ஒரு நாள் போட்டியிலும் கலக்கியுள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பாராட்டியுள்ளார்.
yadhav
இந்திய கிரிக்கெட் அணியில் முதல் சைனா மேன் பந்துவீச்சளாராக இருந்து வருபவர் குல்தீப யாதவ். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை பெற்று கலக்கியுள்ளார் குல்தீப்.

நேற்று (ஜூலை 12) ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவருக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 10 ஒவர்களை வீசி 25 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கை பற்றினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி “இது ஒரு சிறப்பான வெற்றி, மிடில் ஓவர்களில் பந்து வீசிய மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்கள் சூட்சகமாக செயல்பட்டனர். குல்தீப் சிறப்பாக பந்து வீசினார். 25 ரன்களை கொடுத்து 6 விக்கெட் எடுத்ததை நான் சமீப காலமாக எந்த ஒரு ஒரு நாள் போட்டியிலும் கண்டது இல்லை. இந்த இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் (குல்தீப்,சஹல்) வந்ததிலிருந்தே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் எங்களது சிறந்த ஆயுதமாக திகழ்ந்து வருகின்றனர் ” என்று கூறியுள்ளார்.