இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி துவக்க வீரரான அகர்வாலுக்கு பதிலாக கில், சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ், முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மற்றும் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடராஜன் பங்கேற்றார். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் வெளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இந்திய அணியில் பேக்கப் பபவுலராக வந்த நடராஜன் டி20 தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்றார்.
அதன் பிறகு திடீரென ஒருநாள் தொடருக்கான அணியிலும் சைனிக்கு முதுகுவலி ஏற்படும் பட்சத்தில் அவரின் இடத்தில் விளையாடுவார் என்று கூறி ஒருநாள் தொடருக்கான அணியிலும் நடராஜன் பி.சி.சி.ஐ மூலமாக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடைசி போட்டியில் முதல் 2 போட்டிகளிலும் விளையாடிய சைனிக்கு பதிலாக அவர் அறிமுகப் போட்டியில் விளையாடினார். கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அது மட்டுமின்றி அவரது யார்க்கர் வீசும் திறன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமின்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் பார்வையையும் திருப்பியது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக கடந்த ஆண்டு ரசித் கானுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக அவர் திகழ்ந்தார். டிஎன்பிஎல் இல் ஆரம்பித்த அவரது பயணம் இன்று இந்திய அணி வரை சென்றுள்ளது. அவரின் இந்த அறிமுகப் போட்டிக்காக பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடராஜன் தனது அறிமுக போட்டியின் தொப்பியை அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து பெற்றார்.
அந்த நிகழ்வினை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளது. மேலும் அந்த வீடியோவில் இந்திய அணியின் 232 ஆவது ஒருநாள் வீரராக கோலியின் கையில் இருந்த தொப்பியை பெரும் நடராஜன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி நடராஜனின் தொப்பியை வழங்கியது மட்டுமின்றி தோளில் தட்டிக்கொடுத்து “ஆல் த பெஸ்ட்”, “வே டூ கோ” என கூறி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.
A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020
இரண்டாவது பவுலிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வீழ்த்தி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய நடராஜன் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை நடராஜனை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய நடராஜனுக்கு தற்போது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.