
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்களையும், தொடக்க வீரர் ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தனர்.
இதனால் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 50 ரன்கள் விளாசியதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார்.
அந்த சாதனைகள் யாதெனில் 36 பந்துகளில் அரைசதம் குவித்த போது அவர் கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்திற்கு முன்னேறினார். கேப்டனாக விராட் கோலி 1464 ரன்கள் குவித்து முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் ஆரோன் பின்ச்(1462), அடுத்தடுத்த இடத்தில் வில்லியம்சன்(1383), மோர்கன்(1321) ஆகியோர் இருக்கின்றனர்.
மேலும் இரண்டாவதாக இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் கோலி கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 12 அரை சதங்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னர் 11 அரை சதத்துடன் வில்லியம்சன் மற்றும் கோலி ஆகியோர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் நேற்றைய போட்டியில் கோலி விளாசிய இந்த அரைசதம் மூலம் 12 டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைக்கும் விராட் கோலிக்கு இந்த டி20 தொடரும் ஒரு சிறப்பானதாக அமைந்தது. மேலும் இந்த தொடரில் 3 அரைசதங்களை விளாசியதன் மூலம் “மேன் ஆப் தி சீரியஸ்” அவார்டையும் கோலி பெற்றது குறிப்பிடத்தக்கது.