இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது. இதுவரை முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 55 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்துள்ளது. பண்ட் 10 ரன்களுடனும், ரஹானே 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்க வீரராக அகர்வால் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 34 ரன்கள் குவித்தார்.
மற்றபடி அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். விஹாரி 7 ரன்களிலும், துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்களிலும் புஜாரா 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து இந்த போட்டியிலும் கோலி சோபிக்க தவறினார்.

இந்த தொடர் முழுவதும் பெரிதாக ரன் குவிக்க திணறி வரும் கோலி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்த டெஸ்ட் தொடரிலும் அவரால் ரன் குவிக்க முடியாமல் போனதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைதானத்தில் மழை வலுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மைதானத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மீதியிருக்கும் ஆட்டம் ரத்தானதால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.



