
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 669 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 311 ரன்கள் பின்தங்கிய இந்தியாவுக்கு சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே திணறில் இந்தியாவுக்கு கேப்டன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்கள். 4வது நாள் முழுவதும் விக்கெட்டை விடாமல் இந்தியாவை தூக்கி நிறுத்திய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தார்கள். அதில் 5வது நாளில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 90 ரன்னில் விக்கெட்டை இருந்தார்.
இதையும் சேர்த்து இத்தொடரில் 4 போட்டிகளில் ராகுல் மொத்தம் 511* ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 46 வருடங்கள் கழித்து 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். கடைசியாக 1979ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருந்தார்.
இது போக சேனா நாடுகளில் 2வது அதிக முறை 50+ ரன்கள் அடித்த ஆசிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற இலங்கையின் திமுத் கருணரத்னே சாதனையையும் ராகுல் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சுனில் கவாஸ்கர்: 19
2. கேஎல் ராகுல்/திமுத் கருணரத்னே: 12
3. சயீத் அன்வர்/விரேந்தர் சேவாக்/தமீம் அக்மல்: 10
இதையும் படிங்க: 103 ரன்ஸ்.. ப்ராட்மேன், கவாஸ்கரின் உலக சாதனை சமன்.. 1990 சச்சினுக்கு பின் கில் சாதனை.. இந்தியா தப்புமா?
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கில் சதத்தை அடித்து 100 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற விளையாடி வருகிறார்கள். இங்கிருந்து இந்தியா இன்றைய நாள் மாலை வரை நங்கூரமாக விளையாட வேண்டியுள்ளது.