
ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் கோலாகலமாக துவங்க உள்ளது. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள இந்த உலக கோப்பை வரும் நவம்பர் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் அந்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று, நாக்-அவுட் சுற்று என 3 வகையான சுற்றுகளை கொண்ட இந்த உலக கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த உலக கோப்பை வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று துவங்கினாலும் முதன்மை சுற்றாக கருதப்படும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ஆம் தேதியன்று போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடையே சிட்னி நகரில் துவங்கவுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் :
அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகப்புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏனெனில் பொதுவாகவே இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அனல் பறக்கும். மேலும் சமீப காலங்களாக எல்லைப் பிரச்சினை காரணமாக இவ்விரு அணிகள் நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறாமல் இருப்பதால் ஐசிசி நடக்கும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. எனவே இவ்விரு அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.
ரோஹித்தை ராகுல் விக்கெட் பெஸ்ட்:
கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்ட இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த அணியிடம் பரிதாப படுதோல்வியடைந்து பெரிய அவமானத்தைச் சந்தித்தது. மறுபுறம் மிகச் சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை உலகக்கோப்பையில் மண்ணை கவ்வ செய்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாற்றை மாற்றி எழுதியது.
குறிப்பாக அந்தப் போட்டியில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை அவுட் செய்து வெற்றிக்கு வித்திட்ட பாகிஸ்தான் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் டாப் 3 வீரர்களையும் ஒரே போட்டியில் அவுட் செய்ததில் மிகவும் பிடித்த விக்கெட் ரோஹித் சர்மாவா அல்லது கேஎல் ராகுலா என்ற கேள்விக்கு சாஹீன் ஆப்ரிடி மனம் திறந்துள்ளார்.
இதுபற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் விக்கெட் தான் எனக்கு மிகவும் பிடித்த விக்கெட். ஏனெனில் அந்த சமயத்தில் பந்து பிட்ச் ஆன பின்பு அவ்வளவு நகரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அந்த போட்டியில் நான் வீசிய 2வது ஓவரில் கிடைத்ததாகும். பொதுவாக முதல் ஒருசில பவர் பிளே ஓவர்களில் பந்து அவ்வளவு ஸ்விங் ஆகாது” என கூறினார். தற்போதைய நிலைமையில் இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா தான் மிகப் பெரிய ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட நிலையில் ரோகித் சர்மாவை விட கேஎல் ராகுலை அவுட் செய்தது தான் தமக்கு மிகவும் பிடித்துள்ளதாக ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஸ்டார் பவுலர்:
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த அந்த போட்டியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே அவுட்டாக அடுத்த ஓவரிலேயே கேஎல் ராகுல் அவுட் ஆனார். அதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீட்க போராடிய கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் அவரையும் சாஹீன் ஆப்ரிடி அவுட் செய்தார். இந்தியாவின் 3 முக்கிய வீரர்களை அவுட் செய்த அவர் இறுதியில் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அசத்தினார்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவுள்ள அறிய நிகழ்வு – இருந்தாலும் அவங்க பாவம்தான்
அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் நடந்த அனைத்து போட்டிகளில் அசத்திய அவர் தற்போது நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் பிரிமியர் லீக் 2022 தொடரில் லாகூர் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து யாருமே எதிர்பாராத வண்ணம் கோப்பையையும் வென்று காட்டினார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒரு தொடரின் கோப்பையை வென்ற கேப்டன் என்று அசத்தலான சாதனை படைத்துள்ள இளம் சாஹீன் ஆப்ரிடி தற்போது பாகிஸ்தானின் உச்சபட்ச ஸ்டார் பந்துவீச்சாளராக ஜொலிக்கிறார்.