என்னைப்போன்ற வீரர்களுக்கு அவர் ஒரு ஹீரோ. கட்டித்தழுவி நன்றி சொல்ல வேண்டும் – கே.எல் ராகுல் உருக்கம்

Rahul

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து பத்து நாட்கள் ஆகியும் அவர் குறித்த செய்திகள் வெளியாவதில் எந்த ஒரு ஓய்வும் இல்லை. அந்த அளவிற்கு நாள் ஒன்றுக்கு பல செய்திகள் தோனி குறித்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. தோனியின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவது ஒரு ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.

Dhoni

மேலும் தோனிக்கு உலகெங்கிலும் இருந்தும், பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது மட்டுமின்றி அவருக்கு முறையான வழி அனுப்பும் ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தோனி உடனான தங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் தோனி குறித்து தற்போது பேசியுள்ளார். ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேசிய ராகுல் கூறியதாவது : தோனியின் ஓய்வு என்பது இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகத்திற்கும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.

நாங்கள் எல்லாம் தோனியைப் போல ஆகவேண்டும் என்று பார்த்து வளர்ந்தவர்கள். குறிப்பாக என்னை போன்று சிறிய நகரங்களில் இருந்து கிரிக்கெட்டுக்கு வருபவர்களுக்கு தோனி தான் ஹீரோ. எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல எப்போதும் இலக்கை நோக்கிய முயற்சியே முக்கியம் என நாங்கள் சொல்லிக் கொள்வோம்.

- Advertisement -

Rahul

எனக்கு மீண்டும் தோனியிடம் பேசுவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை. அவரை நேரில் பார்க்கும் போது நீண்ட நேரம் அவரை கட்டித்தழுவி நன்றி சொல்வேன் என ராகுல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.