
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏப்ரல் 22ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 40வது போட்டியில் டெல்லி அணி லக்னோவை 8 வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 160 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய டெல்லி 17.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு தங்களுடைய 6வது வெற்றியைப் பெற்று அசத்தியது.
அந்த வெற்றிக்கு அபிஷேக் போரேல் 51, கேஎல் ராகுல் 57*, கேப்டன் அக்சர் பட்டேல் 34* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினர். முன்னதாக அந்தப் போட்டியில் அரை சதமடித்த போது ராகுல் தன்னுடைய முதுகின் பின்னே இருக்கும் ஜெர்ஸி நம்பர் மேலே பேட்டை வைத்து கொண்டாடி லக்னோ அணியின் உரிமையாளருக்கு பதிலடி கொடுத்தார். ஏனெனில் கடந்த வருடம் வரை லக்னோ அணிக்காக ராகுல் கேப்டனாக விளையாடி வந்தார்.
அவரது தலைமையில் ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் லக்னோ போராடாமலேயே மோசமாக தோற்றது. அப்போது பொதுவெளியில் ராகுலை திட்டும் வகையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினார். அதற்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதன் காரணமாக லக்னோ அணியிலிருந்து வெளியேறிய ராகுல் இம்முறை டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் இந்தப் போட்டியில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணிலேயே தோற்கடித்த ராகுல் தன்னை தரமான பிளேயர் என்பதை உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு காண்பித்தார். குறிப்பாக சஞ்சீவ் கோயங்கா எப்போதும் 1 என்ற நம்பரைக் கொண்ட ஜெர்ஸியை அணிந்திருப்பார்.
மறுபுறம் கேஎல் ராகுலும் 1 என்ற நம்பரைக் கொண்ட ஜெர்ஸியை தான் அணிந்துள்ளார். அதை பேட்டில் குறித்துக் காட்டிய ராகுல் “பிசினஸில் நீங்கள் நம்பர் ஒன்னாக இருந்தாலும் கிரிக்கெட்டில் நான் தான் நம்பர் ஒன்” என்ற வகையில் சஞ்சீவ் கோயங்காவுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டாடினார். மறுபுறம் அதைப் பார்த்த சஞ்சீவ் பெவிலியனில் பேச முடியாமல் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: கோபத்தை அதுல காட்டுங்க.. நேரலையில் ஜாம்பவான் ஜஹீர் கானிடம் வாதிட்ட ரிஷப் பண்ட்டை சாடிய கும்ப்ளே
இறுதியில் போட்டி முடிந்ததும் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அவருடைய மகன் ராகுலிடம் கை கொடுத்து பேச முயற்சித்தனர். அவர்களிடம் கை மட்டுமே கொடுத்த ராகுல் பேச்சுக் கொடுக்காமல் அங்கிருந்து வேகமாக திரும்பி சென்று மற்றொரு பதிலடிக் கொடுத்தார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது, வாழ்க்கை ஒரு வட்டம் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.