
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதல் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 55 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது :
இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக நாளை 122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாட இருக்கிறது. இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் 13 ரன்களுடனும், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் 59 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை குவித்துள்ள கே.எல் ராகுல் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெறும் 2 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 18-வது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதம் மற்றும் 20 அரைசதம் என 3985 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி அணியில் கே.எல் ராகுல் ஆட வேண்டிய இடம் இதுதான்.. அதுதான் அந்த அணிக்கு நல்லது – ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் அடித்த 13 ரன்களையும் சேர்த்து தற்போதைய நிலையில் 3998 ரன்களுடன் இருக்கும் அவர் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக 4,000 ரன்களை பூர்த்தி செய்த 18-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.