இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் தோற்ற இந்தியா 3வது போட்டியை போராடி டிரா செய்தது. இதைத்தொடர்ந்து 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் பாக்ஸிங் டே ஸ்பெஷல் போட்டியாக மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைக்க அப்போட்டியில் இந்தியா வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக கேஎல் ராகுல் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் சமீப காலங்களில் சுமாராக விளையாடிய அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார்.
ராகுல் அசத்துவாரா:
அந்த சூழ்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் ரோஹித்துக்கு பதிலாக துவக்க வீரராக விளையாடிய அவர் 77 ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார். அதே போல 3வது போட்டியில் 84 ரன்கள் குவித்து அசத்திய அவர் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட அவர் கடைசியாக இந்தியா விளையாடிய 2 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் சதமடித்துள்ளார்.
ஆம் கடைசியாக 2021ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ராகுல் இந்தியாவுக்காக 123 ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். பின்னர் 2023ஆம் ஆண்டு மீண்டும் அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சதத்தை அடித்தார். இருப்பினும் அந்த பாக்ஸிங் டே போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
பாக்ஸிங் டே நாயகன்:
அதை அடுத்து இம்முறை மெல்போர்ன் பாக்ஸிங் டே போட்டியில் ராகுல் விளையாட உள்ளார். ஒருவேளை அந்தப் போட்டியில் சதத்தை அடிக்கும் பட்சத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான வரலாற்றுச் சாதனையை ராகுல் நிகழ்த்துவார். இதற்கு முன் சச்சின் முதல் விராட் கோலி உட்பட யாருமே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்ததில்லை.
இதையும் படிங்க: ஒன்னா ரெண்டா 4 அவமானத்தை செஞ்சு அஸ்வின் ரிட்டயராக வெச்சுட்டீங்க.. இந்திய அணியை விளாசிய கவாஸ்கர்
சொல்லப்போனால் 2014ஆம் ஆண்டு இதே மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே நாளில் தான் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போட்டியில் அவர் 3, 1 ரன்களில் அவுட்டானார். எனவே 10 வருடங்கள் கழித்து இம்முறை அதே மைதானத்தில் ராகுல் இந்த பொன்னான சாதனையை நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



