கிறிஸ் கெயிலையும் மிஞ்சிய கைரன் பொல்லார்ட் – டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் புதிய வரலாற்று சாதனை

KIeron Pollard Chris Gayle
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் உருவாக்கப்பட்ட டி20 போட்டிகள் அதுவரை நடைபெற்று வந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை பின்னுக்கு தள்ளி இன்று ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியுள்ளது. அதிலும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பரிணாமத்தையும் எழுச்சியையும் கண்டு சர்வதேச போட்டிகளை மிஞ்சும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அப்படி 5 நாட்கள் பார்க்க முடியாமல் உருவாக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட்டையும் பார்க்க முடியாமல் 3 – 4 மணி நேரங்களில் முடிவைக் கொடுக்கும் டி20 போட்டிகளையும் விரும்பாத சில ரசிகர்கள் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட்டின் பக்கம் திரும்பியுள்ளனர்.

அந்த வரிசையில் 20 ஓவர் போட்டிகளும் அல்லாமல் 10 ஓவர் போட்டிகளும் அல்லாமல் இரண்டுக்கும் நடுவே அதாவது 100 பந்துகளை கொண்ட புதிய கிரிக்கெட் தொடரை கடந்த வருடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியது. கிரிக்கெட்டில் புதிய முயற்சியாகவும் பரிணாமமாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரின் வெற்றிகரமான முதல் சீசனை தொடர்ந்து 2-வது சீசன் இந்த வருடம் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என 2 வகைகளிலும் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் கிரிக்கெட்டில் 8 அணிகள் 58 போட்டியில் கோப்பைக்காக மோதி வருகின்றன.

- Advertisement -

மிரட்டிய பொல்லார்ட்:
அந்த வரிசையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதியான நேற்று உலகப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இயன் மோர்கன் தலைமையிலான லண்டன் ஸ்பிரிட் மற்றும் ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் ஆகிய அணிகள் 6வது லீக் போட்டியில் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் அதிரடியாக விளையாடி 160/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 41 (34) ரன்களை எடுக்க மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல் 21 (15) ரன்களும் இயன் மோர்கன் 37 (26) ரன்களும் எடுத்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் தனக்கே உரித்தான முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 1 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு வெறும் 11 பந்துகளில் 34* ரன்களை 309.09 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய மான்செஸ்டர் அணிக்கு பிலிப் சால்ட் 36 (34) ரன்கள் எடுத்தாலும் ஜோஸ் பட்லர் 6 (11) உட்பட எஞ்சிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 98 பந்துகளிலேயே 108 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய லண்டன் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

கெயிலையும் மிஞ்சிய பொல்லார்ட்:
பொதுவாகவே காட்டடி பேட்ஸ்மேனாக கருதப்படும் பொல்லார்ட் ஐபிஎல் 2022 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அரிதினும் அரிதாக படுமோசமாக பேட்டிங் செய்ததால் கடைசியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஹண்ட்ரட் தொடரில் அதிரடியாக விளையாடும் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதைவிட நேற்றைய போட்டியில் விளையாடிய அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சரித்திர சாதனையை படைத்தார்.

இந்த ஹண்ட்ரட் போட்டிகளும் டி20 போட்டிகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 2006 முதல் உலகில் நடைபெறும் அத்தனை பிரீமியர் லீக் தொடர்களிலும் 15க்கும் மேற்பட்ட வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் அவர் 600 போட்டிகளில் விளையாடும் முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே தென் ஆப்பிரிக்காவின் அல்பி மோர்கல் 100 (2010), 200 (2012) டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெயரைப் பெற்ற நிலையில் 300 (2016), 400 (2018), 500 (2020), 600 (2022*) ஆகிய போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ட்வய்ன் ப்ராவோ (543), சோயப் மாலிக் (472), கிறிஸ் கெயில் (463) ஆகியோர் உள்ளனர். மேலும் ரன்கள் அடிப்படையில் டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுலகர் என்றழைக்கப்படும் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருந்தாலும் போட்டிகளின் அடிப்படையில் இவர் அவரையும் மிஞ்சியுள்ள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 14562 ரன்கள் (463 போட்டிகள்)
2. கைரன் பொல்லார்ட் : 11723* (600 போட்டிகள்)
3. சோயப் மாலிக் : 11698 (472 போட்டிகள்)

இப்படி டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காகவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த பொல்லார்ட் 600 போட்டிகளில் விளையாடுவேன் என்று ஆரம்ப காலத்தில் நினைக்கவே இல்லை என்றும் வருங்காலங்களில் முடிந்தளவுக்கு இதேபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்றும் இது பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருக்கு இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement