இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ஹிட்மேன் என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அவர் இந்தியாவின் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தினர். 2023 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் ஃபைனல் வரை சென்ற இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தது.
அந்த வகையில் வெற்றிகரமான கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா நிறைய இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகளையும் ஆதரவுகளையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் தம்முடைய ஆரம்பக் காலங்களில் சுமாராக பவுலிங் செய்ததாக கூறியுள்ளார். அப்போது ரோஹித் நேரடியாக தம்மிடம் வந்து உத்வேகமான வார்த்தைகளையும் ஆதரவையும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா:
2019ஆம் ஆண்டு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் தடுமாறிய தம்மிடம் ரோஹித் பேசியது குறித்து கலீல் தெரிவித்தது பின்வருமாறு. “அன்று ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த எனக்கு அன்றைய நாள் நன்றாக அமையவில்லை. அன்றைய நாளில் உடைமாற்றும் அறையில் என்னிடம் வந்த ரோஹித் பாய் தனியாக நேருக்கு நேராக பேசினார்”
“அணி மைதானத்தை விட்டு வெளியேறிய போதும் அவர் அங்கேயே இருந்து என்னிடம் பேசினார். என்னுடைய சொந்த திறமைகளை நான் உணரவில்லை என்று ரோஹித் தெரிவித்தார். மற்றொரு தருணத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவருடைய பெயரை சொல்லி கூச்சலிட்டனர். அப்போது “இந்த அனைத்தும் உனக்கும் நடக்கும். அதற்கு நீ நேர்மறையாக இருந்து நமக்கும் இப்படி நடக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்” என்று என்னிடம் ரோஹித் சொன்னார்”
10 வருஷம் விளையாடனும்:
“அவரைப் போன்ற கேப்டன் போட்டி முடிந்ததும் என்னிடம் அப்படி பேசியதைப் பார்த்தது அவர் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதே ஆலோசனைகளை அவர் ரிஷப் பண்ட்டிடம் தெரிவித்ததையும் பார்த்துள்ளேன். பெரும்பாலும் நீங்கள் மோசமாக விளையாடினால் மக்கள் உங்களை பார்க்க மாட்டார்கள். ஆனால் அந்த விஷயத்தில் ரோஹித் வித்தியாசமானவர்”
இதையும் படிங்க: அண்ணன் மாதிரியான விராட் கோலி.. இந்த அட்வைஸை கொடுத்ததே நான் முன்னேற காரணம்.. ஜிதேஷ் பேட்டி
“சமீபத்தில் அவரை நான் துலீப் கோப்பையில் என்சிஏவில் சந்தித்தேன். அப்போது ஃபிட்டாக தெரிந்த அவரிடம் இதே போல இருந்து தொடர்ந்து விளையாடுங்கள் என்று சொன்னேன். அவரைப் போன்ற கேப்டனையும் நபரையும் என்னுடைய வாழ்வில் கடினமாகவே பார்த்துள்ளேன். வைரக்கல்லை போன்ற அவர் மீது எனக்கு நிறைய அன்பும், மரியாதையும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக அவர் இன்னும் 10 வருடங்கள் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



