ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பெரும்பாலான இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் இத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 டி20 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
அந்த சூழ்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 6ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹாரரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணிக்காக அபிஷேக் ஷர்மா, ரியன் பராக், துருவ் ஜூரேல் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர்.
தனித்துவ சாதனை:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசென்ட் கயா ஆரம்பத்திலேயே முகேஷ் குமார் வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாடிய பிரைன் பெனட் 23 (15) ரன்களில் ரவி பிஸ்னோய் சுழலில் போல்ட்டானார். அதே போல மறுபுறம் தடுமாறிய வேஸ்லி 21 (22) ரன்களில் ரவி பிஸ்னோய் சுழலில் சிக்கினார்.
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் சிக்கந்தர் ராசா 17, டியோன் மேயர்ஸ் 23, கேம்ப்பல் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் கிளைவ் மடண்டே 29* (25) ரன்கள் அதிரடியாக எடுத்தும் 20 ஓவரில் ஜிம்பாவே அணி 115/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் கலீல் அஹ்மத் 5 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் 5 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இப்போட்டியில் களமிறங்கினார். இந்த காலகட்டங்களில் இந்தியா 104 டி20 போட்டிகளில் விளையாடியது.
இதையும் படிங்க: இதை மட்டும் பண்ணா போதும்.. விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் பிடிச்சிடுவார் – விவரம் இதோ
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கும் அதற்கடுத்த போட்டிக்கும் இடையே அதிக போட்டிகளை தவற விட்ட வீரர் என்ற தனித்துவமான சாதனையை கலீல் அஹ்மத் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கலீல் அஹ்மத் (இந்தியா) : 104*
2. டேவோன் தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்) : 102
3. ரோணி தாலுக்தார் (வங்கதேசம்) : 100
4. மாட் ஹென்றி (நியூஸிலாந்து) : 93



