நீங்கள் சாதித்ததை மற்றவர்களால் கனவிலும் சாதிக்க முடியாது – விராட் கோலிக்கு ஜாம்பவான் ஆதரவு, அதற்கான புள்ளிவிவரம் இதோ

Kohli-2
- Advertisement -

நடைபெற்றுவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என இதுவரை களமிறங்கிய அனைத்து வகையான போட்டிகளிலும் நட்சத்திரம் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை எடுக்காதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 இன்னிங்ஸ்களாக சதமடிக்கவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாகும். மேலும் 2017 முதல் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக அனைத்து பதவிகளையும் படிப்படியாக ராஜினாமா செய்து கடந்த ஜனவரி முதல் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்பட்டதால் பொறுமையிழந்த அனைவரும் விமர்சனத்தையும் தாண்டி தற்போது அணியில் இருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கிவிட்டனர். அதிலும் பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் இந்திய அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் விளையாடுகிறீர்கள் என்று கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் அவரை கேட்காத கேள்விகளே கிடையாது.

- Advertisement -

ஆதரவு கரங்கள்:
இருப்பினும் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அனைத்து விதமான காலச் சூழ்நிலைகளிலும் அபாரமாக எதிர்கொண்டு 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ள விராட் கோலி இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார். அந்த வகையில் சர்வதேச அரங்கில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளது அவ்வளவு சுலபமல்ல என்று தெரிவிக்கும் சில முன்னாள் வீரர்கள் அவருக்கு தங்களது முழுமையான ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக விராட் கோலி ஆங்கிலேயராக பிறந்து எங்களது நாட்டில் விளையாடியிருந்தால் நாங்கள் இவ்வளவு விமர்சனங்களை வைக்க மாட்டோம் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் ஆதரவு கொடுத்திருக்கிறார். அதைவிட இந்த கடினமான தருணத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது என்ற வகையில் பாகிஸ்தான் நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் “இதுவும் கடந்து போகும்” என்று ட்வீட் போட்டு ஆதரவு தெரிவித்துள்ளது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

பீட்டர்சன் ஆதரவு:
இந்நிலையில் இந்த கடுமையான விமர்சனங்களில் இருந்து தம்மால் மீண்டு வரமுடியும் என்ற வகையில் “கீழே விழுந்தாலும் உயரே பறக்க முடியும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் புகைப்படம் எடுத்த விராட் கோலி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கெவின் பீட்டர்சன் “பெரிய மனிதரே நீங்கள் சுதந்திரமாக இருங்கள். கிரிக்கெட்டில் நீங்கள் சாதித்துள்ளவற்றை நிறைய பேர் இங்கு கனவாக மட்டுமே காண முடியும். அவர்கள் இந்த விளையாட்டை விளையாடிய சில சிறந்த வீரர்களாவும் உள்ளனர்” என்று பதிலை பதிவிட்டு மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆதரவையும் கொடுத்துள்ளார்.

அவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் விளையாடிய நிறைய தரமான வீரர்களும் இப்போது விளையாடி வரும் நிறைய தரமான வீரர்களும் சாதிக்க முடியாத நிறைய சாதனைகளை விராட் கோலி 33 வயதிலேயே சாதித்துள்ளார். இந்த சோதனை காலங்களிலும் கூட இடையிடையே 30, 50 போன்ற ரன்களை அடித்தாலும் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்ற ஒரு தரத்தை உருவாக்கியுள்ளது அவரின் தங்கமான திறமைக்கு சான்றாகும்.

புள்ளிவிவரம்:
அவர் அடுத்துள்ள 70 சதங்களை குமார் சங்ககாரா, ஜாக் காலிஸ், வீரேந்திர சேவாக் உட்பட ஏராளமான ஜாம்பவான்களால் கூட அடிக்க முடியவில்லை. அதற்காக அந்த காலத்து தரமான பவுலர்கள் இப்போதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 70*
2. ஜோ ரூட் : 44*
3. டேவிட் வார்னர் : 43*
4. ரோகித் சர்மா : 41*
5. ஸ்டீவ் ஸ்மித் : 38*

அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 23709*
2. ஜோ ரூட் : 17471*
3. ரோஹித் சர்மா : 15875*
4. கேன் வில்லியம்சன் : 15562*
5. தமீம் இஃபால் : 14749*

Advertisement