வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் 16 வருடங்களுக்கு பின் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
இம்முறை இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களுடன் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற நிறைய இளம் வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கி அடித்து நொறுக்கும் ஜெய்ஸ்வால் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
தடுமாறும் வீரருக்கு ஆதரவு:
அதே போல மிடில் ஆர்டரில் ஃபினிஷராக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் இந்தியாவுக்கு அற்புதமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். எனவே சவாலான வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அனுபவத்தாலும் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் திறமையாலும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போகும் வீரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய வீரராக சுப்மன் கில் இருப்பார் என்றும் கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற சுப்மன் கில் சமீப காலங்களாகவே சொதப்பலாக செயல்பட்டு வரும் நிலையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“கரீபியன் மைதானங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் ரசிகர்களுக்கு முன்னிலையில் 2010 டி20 உலகக் கோப்பையை நாங்கள் வென்றது ஸ்பெஷலாகும். இம்முறை உலகக் கோப்பைக்கு முன்பாக ஏப்ரல் – மே மாதங்களில் ஐபிஎல் நடைபெற உள்ளது. எனவே அந்தத் தொடரில் அசத்தும் வீரர்கள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஜொலிப்பார்கள். சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலைகள் தான் வெஸ்ட் இண்டீஸில் இருக்கும்”
இதையும் படிங்க: அவர் ரெடியா இருக்காரு.. முதல் போட்டியே கடைசி வாய்ப்பா இருக்கலாம்.. சர்பராஸ் கானுக்கு ஹர்பஜன் அறிவுரை
“அங்கே லோ பவுன்ஸ் மற்றும் லேசாக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய அழகான மைதானங்கள் இருக்கும். அத்தொடரில் இந்திய அணிக்காக சுப்மன் கில் அசத்துவார். அவர் தான் அந்த வீரர்” என்று கூறினார். முன்னதாக கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2010 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கோப்பையை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.