ஐபிஎல்’ல மட்டும் அடிப்பார்னு நினைக்காதீங்க, சுப்மன் கில்லை விட அவர் நேரடியா 2023 உ.கோ’யில் விளையாட தகுதியானவர் – பீட்டர்சன்

Pieterson-1
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏராளமான இளம் வீரர்கள் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க வீரராக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இதுவரை 575 ரன்களை விளாசி அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். பானி பூரி விற்பவரின் மகனாக அடிமட்டத்திலிருந்து வந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற பெருமையைக் கொண்ட அவர் இந்த சீசனில் மும்பைக்கு எதிரான வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் தனி ஒருவனாக 124 (62) ரன்கள் விளாசி சரித்திரத்தில் தனது பெயரை எழுதினார்.

Yashasvi Jaiswal 2

- Advertisement -

அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக முதல் ஓவரிலேயே 26 ரன்கள் அடித்து 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அதனால் இடது கை சேவாக்கை போல ஜெய்ஸ்வால் எதிரணிகளைப் பந்தாடுவதாக சமீபத்தில் பாராட்டிய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நேரடியாக அவரை 2023 உலக கோப்பையில் வாய்ப்பு கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

பீட்டர்சன் அதிரடி:
மறுபுறம் கடந்த 3 மாதங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்தும் சுப்மன் கில் ஏற்கனவே கேஎல் ராகுல் காயமடைந்துள்ள நிலையில் ஷிகர் தவான் தடுமாறுவதால் ரோகித் சர்மாவுடன் உலகக் கோப்பையில் களமிறங்கும் அளவுக்கு தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும் இதே ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கடந்த போட்டியில் முதல் முறையாக சதமடித்து 576 ரன்களை எடுத்துள்ள அவரும் உலகக்கோப்பை விளையாடும் அளவுக்கு தொடர்ந்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

Gill

இருப்பினும் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் சற்று மெதுவான ஸ்ட்ரைக் விளையாடும் சுப்மன் கில்லை (146) விட ஜெய்ஸ்வால் (166.18) அதிரடியான ஸ்ட்ரைக் ரைட்டை கொண்டுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான தரத்தை கொண்ட ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ள ஜெய்ஸ்வாலை தாமாக இருந்தால் 2023 உலக கோப்பையில் நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு பதிலாக தேர்ந்தெடுப்பேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதே சமயம் திறமையான சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களால் இந்திய அணியின் வருங்கால டாப் ஆர்டர் மிகவும் வலுவானதாக இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியின் வருங்கால டாப் ஆர்டரை நாம் சுப்மன் கில் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரிடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் நான் ஜெய்ஸ்வால் விளையாடுவதை வலுவான ஆதரவுடன் பார்க்கிறேன். நிச்சயமாக அவருக்கு நேராக வாய்ப்பு கொடுத்து நான் தேர்ந்தெடுப்பேன். வருங்காலங்களில் 50 ஓவர் போட்டிகள் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் அவரை உடனடியாக அணியில் சேர்ப்பேன்”

Pietersen

“மேலும் ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பையும் உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பதற்கான இடத்தையும் உச்சகட்ட அழுத்தம் நிறைந்த போட்டிகளில் போட்டியிட்டு விளையாடும் உன்னதமான 3 நிலைகளை கொடுக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக ஐபிஎல் தொடரிலும் ரசிகர்களால் நிரம்பி வழியும் மைதானங்களும் அழுத்தமும் இருக்கிறது”

இதையும் படிங்க:எனக்கு அப்றம் இந்தியாவோட அடுத்த தலைமுறை அவர் தான் – இளம் வீரரை மீண்டும் பாராட்டிய விராட் கோலி

“அப்படிப்பட்ட தொடரில் நீங்கள் அந்த 3 தேர்விலும் தேர்ச்சி பெற்று வந்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாட தகுதியானவர்கள். அதைத்தான் இந்த இளம் வீரர்கள் செய்து நட்சத்திரங்களாக உருவெடுப்பார்களா என்று பார்க்கிறேன். அவர்கள் ஒருநாள் வந்து செல்பவர்கள் அல்ல தரமானவர்கள்” என்று கூறினார்.

Advertisement