கிரிக்கெட்டிற்காக புதிய அவதாரத்தை எடுத்துள்ள கேதார் ஜாதவ் – ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ள முக்கிய முடிவு

Kedar-Jadhav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அடுத்த வருடமே டி20 போட்டிகளிலும் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினார். அதே காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் கடந்த 2016 – 2017 காலகட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார்.

அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதுடன் இந்திய அணிக்காகவும் அந்த காலகட்டத்தில் ஜொலிக்க தொடங்கிய அவர் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். குறிப்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 351 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 63/4 என தடுமாறியது. அந்த சமயம் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அவர் அபாரமாக பேட்டிங் செய்து 200 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார்.

- Advertisement -

காணாமல் போனால் கேதார் ஜாதவ்:
அதில் ஒருபுறம் விராட் கோலி சதம் அடித்து 122 (105) ரன்கள் எடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேதார் ஜாதவ் சதமடித்து 120 (76) ரன்கள் விளாசி இந்தியாவின் 3 விக்கெட் வித்தியாசத்திலான த்ரில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக ரசிகர்களிடையேயும் பிரபலமடைந்த அவர் அதன்பின் இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக வலம் வந்தார். அதிலும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளராக ஒருசில முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்த அவர் 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

அப்படி சிறப்பாக செயல்பட்டு வந்த அவரின் செயல்பாடுகளில் அந்த உலகக் கோப்பைக்கு பின்பு தொய்வு ஏற்படவே கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவர் தற்போது வெகு தூரம் சென்று காணாமல் போயுள்ளார் என்றே கூறலாம். அதேசமயம் 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னைக்காக முதல் முறையாக மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அவர் காயத்துடன் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறச்செய்து விட்டு சென்றார்.

- Advertisement -

தலைவன் ஜாதவ்:
அதை தொடர்ந்து 2019, 2020 ஆகிய காலகட்டங்களில் படு மோசமாக செயல்பட்ட அவரை ரசிகர்கள் கிண்டல் அடிக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக 2020-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை பெரிய அவமானத்தைச் சந்தித்தது. அதற்கு வித்திட்ட பல காரணங்களில் இவரும் ஒருவராக இருந்ததை எப்போதும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

ஏனெனில் கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில் குறைவான பந்துகளில் அதிக ரன்கள் தேவைப்பட்ட போது கிடைத்த சிங்களை கூட எடுக்காத அவர் தோனியை போல பினிஷிங் செய்து காட்டுகிறேன் என்பது போல் பீல்டர்களை எண்ணிய போதிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் சொதப்பி சென்னைக்கு தோல்வியை பரிசளித்ததை இன்றும் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். அதன் காரணமாக தற்போதைய ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு சிலர் மெதுவாக ஆடினால் கூட உடனே தலைவன் கேதார் ஜாதவ் பரம்பரை என்று கிண்டலடிக்கும் அளவிற்கு அவர் ஆளாகியுள்ளார்.

- Advertisement -

ஜாதவ் அகெடமி:
இப்படி கிண்டல்களுக்கு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ள அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தற்போது கிரிக்கெட் மீது இருக்கும் ஆர்வத்தால் அதற்கு ஏதேனும் நன்மையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக கிரிகெட் அகடமி ஒன்றை துவக்கியுள்ளார். அவரின் சொந்த ஊரான புனே நகரில் துவங்கப்பட்டுள்ள அந்த அகெடமியை அந்த நகரில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் புனித் பாலனுடன் சேர்ந்து அவர் தொடங்கியுள்ளார். அதற்கு “புனித் பாலன் – கேதார் ஜாதவ் கிரிக்கெட் அகெடமி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக மொத்தம் 81 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “புனித் பாலன் – கேதார் ஜாதவ் என்ற பெயரில் கிரிக்கெட் அகெடமி இன்று துவங்கியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : அனல் பறக்கும் ஐபிஎல் 2022 : இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியல் – டாப் 5 இதோ

இதில் நேர்மறையான சிந்தனைகளுடன் தரமான கிரிக்கெட் வீரர்களின் கனவுகளை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க உள்ளோம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் பல்வேறு வகையான கிரிக்கெட்டில் வாய்ப்புகளை வழங்க உள்ளோம்” என கூறியுள்ளார்.

Advertisement