IPL 2023 : ஒருத்தருக்கு பதில் இன்னொரு டெஸ்ட் பிளேயரா? ராகுலுக்கு மாற்றாக லக்னோ வாங்கிய இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த வருடம் பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி அணிக்கு 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ராகுல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். இந்த வருடமும் அவர் தலைமையில் விளையாடிய முதல் 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்த லக்னோ புள்ளி பட்டியலில் இப்போதும் 2வது இடத்தில் ஜொலித்து வருகிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய அவர் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ள கேஎல் ராகுல் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இன்னொரு டெஸ்ட் பிளேயர்:
இதனால் இந்தியாவைப் போலவே லக்னோ அணிக்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவர் விலகியது எதிரணிகளுக்கு தான் பின்னடைவு என்று ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் என்ன தான் நல்ல அனுபவம் கொண்ட கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கடந்த ஒரு வருடமாகவே ஃபார்மை இழந்து திண்டாடி வரும் கேஎல் ராகுல் தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைத்து வருகிறார்.

குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த அவர் இந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக வெறும் 136 ரன்களை சேசிங் செய்யும் போது கடைசி ஓவர் வரை தடவலாக செயல்பட்டு கையிலிருந்த வெற்றியை எதிரணிக்கு பரிசளித்தார். அது போக ராகுல் 20க்கும் குறைவான ரன்களில் அவுட்டான போட்டிகளில் லக்னோ 170க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து அதிக வெற்றிகளை பெற்றது. அதனால் அவர் விலகியது லக்னோ அணிக்கும் இந்திய அணிக்கும் நன்மை தான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் காயமடைந்த ராகுலுக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் கருண் நாயர் வாங்கப்பட்டுள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்காக 2016இல் அறிமுகமாகி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் (303*) அடித்த அவர் அந்த ஒரு இன்னிங்ஸ் தவிர்த்து எஞ்சிய 5 இன்னிங்ஸில் 71 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2 போட்டிகளில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து மட்டுமே எடுத்த அவருக்கு பதிலாக இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்தது.

அதே போல ஐபிஎல் தொடரிலும் 2012 முதல் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளில் விளையாடிய அவர் இதுவரை 68 இன்னிங்ஸில் 1496 ரன்களை 127.75 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் சமீப காலங்களில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகும் அவர் கடந்த 10 இன்னிங்ஸில் வெறும் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்து ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தாத காரணத்தால் இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்திலும் வாங்கப்படவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : ஆத்திரத்தில் திமிர்தனமாக சண்டை போட்ட சிராஜ் – ரசிகர்கள் கண்டிப்பு, இறுதியில் நடந்ததோ வேற லெவல்

அந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு பதிலாக 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ள அவருக்கு இந்த சீசனில் நேரடியாக 11 பேர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டை போல மெதுவாக விளையாடி பின்னடைவை ஏற்படுத்திய ராகுலுக்கு பதிலாக அதிரடி வீரரை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அதே கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு டெஸ்ட் பிளேயரை வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement