இந்திய அணியின் அனுபவ வீரரான கருண் நாயர் கடந்த 2016-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில போட்டிகளிலேயே அவர் கழட்டிவிடப்பட்டார். அதன் பின்னர் நட்சத்திர வீரர்களின் ஆதிக்கம் காரணமாகவும், இளம் வீரர்களின் வருகை காரணமாகவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்து வந்தார். ஆனாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ந்து மலை போல் ரன்களை குவித்து வந்தார்.
இப்படி நடக்கும்னு எனக்கு தெரியும் : கருண் நாயர்
பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேர்வுக்குழுவினரது பார்வை அவரது பக்கம் திரும்பியது. அதன் காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருண் நாயர் டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்திருந்தார்.
அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்டு தனது இடத்தை நிரந்தரப்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இங்கிலாந்து தொடரில் அவர் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக அந்த இங்கிலாந்து தொடரின் 4 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 25.2 சராசரியுடன் 205 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதிலும் குறிப்பாக ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ள கருண் நாயர் கூறியதாவது : உண்மையிலேயே நான் இதை எதிர்பார்த்தேன். இந்திய அணியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை இருந்தாலும் நான் இது குறித்து நிறைய பேச விரும்பவில்லை. ஏனெனில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். கடந்த டெஸ்ட் போட்டியில் கூட மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடாத வேளையில் நான் 50 ரன்கள் அடித்து அணிக்கு பங்களிப்பை வழங்கி இருந்தேன்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை சேர்த்தது ஏன்? விளக்கம் கொடுத்த – அஜித் அகார்கர்
ஆனாலும் இப்படி நடந்தது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். கருண் நாயரின் நீக்கம் குறித்து பேசியிருந்த அகார்கர் கூறுகையில் : அவரிடம் இருந்து நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் தனது வாய்ப்பை அவர் தவற விட்டுவிட்டார் என்று அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



