ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நியூசிலாந்து அணி அதை மேலும் ஒரு முறை செய்து காட்டியிருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி கோப்பையை அந்த அணி கைப்பற்றியிருக்கிறது. கடைசி நாளுக்கு முன்புவரை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சே முடியாமல் இருந்ததால், இந்த போட்டியானது நிச்சயமாக ட்ராவில் தான் முடியும் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், எல்லோரைவிடவும் ஒரு படி மேலே சென்று ட்ராவில் முடிவெதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க ஐசிசி உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு நடந்ததோ யாரும் எதிர்பார்க்காத ஒன்று. கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே மிகச் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஒருவர் பின் ஒருவராக பெவிலியனுக்கு அனுப்பி கொண்டிருந்தனர். இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி நியூசிலாந்துக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்த நியூசிலாந்து அணியானது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலேயே கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டிருக்கும் இந்திய அணியை அனைவரும் விமர்ச்சித்து கொண்டிருக்க, இந்திய வீர்ர்களின் மேல் அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் கபில் தேவ். இதுகுறித்து பேசிய அவர்,
ஒவ்வொரு ஐசிசி தொடரின்போது நமது வீரர்கள் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேறுகின்றனர்.

இது சாதனையா இல்லையா என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். கோப்பையை தவறவிட்டவுடன் அவர்களை விமர்சிக்க தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அதற்காக அவர்கள்பட்ட கஷ்டங்களை நினைக்க தவறி விடுகின்றனர். போட்டி நடைபெறும் நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அன்றைய நாளில் நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதற்காக நாம் இந்த தொடரில் எத்தனை போட்டிகளை கடந்து வந்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்திய அணி ஒரு முறைதான் தோல்வியைத் தழுவியது. ஆனால் மீடியாக்கள் அதை பலமுறை ஒளிபரப்பி அவர்களின் மேல் அழுத்தத்தை கொடுக்கின்றன. அவர்களுக்கு போட்டியை நினைத்து அழுத்தம் இருக்கட்டும். உங்களை நினைத்து இருக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் இந்திய அணியானது அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.



