சதங்களை அடிக்க தெரிந்த சச்சினுக்கு இது தெரியாமல் போச்சே – கபில் தேவ் பகிர்ந்த சர்ச்சையான கருத்து

Kapil

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாயகனாக பார்க்கப்படும் சச்சின் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு 24 ஆண்டுகளில் சச்சின் எக்கச்சக்கமான சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் சச்சின் டெண்டுல்கருக்கு இத்தனை சதமடிக்க தெரிந்தும் அதனை இரட்டை சதமாகவும், முச்சதமாகவும் மாற்ற தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் வீரர் ராமன் அவருடன் உரையாடுகையில் கபில்தேவ் கூறியதாவது :

சச்சினிடம் வேறு எந்த வீரரிடமும் இல்லாத அளவிற்கு அசாத்திய திறமை இருக்கின்றது தான். சதங்களை எவ்வாறு தொடர்ச்சியாக அடிப்பது என்று சச்சின் நன்றாக தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அவர் அதை இரட்டை சதமாகவும், முச்சதமாகவும் அவரால் மாற்ற முடியவில்லை. பந்துவீச்சாளர் யாராக இருந்தாலும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க கூடிய திறமைவாய்ந்தவர் சச்சின்.

அப்படி இருக்கையில் குறைந்தது மூன்று முச்சதங்கள், 10 இரட்டை சதங்கள் அடித்து இருக்க வேண்டும் என்று கபில் தேவ் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறியதும் ஒரு விதத்தில் சரியான விடயமாக தான் தோன்றுகிறது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக 250 ரன்களைக் கூட அவர் தொட்டதில்லை. அவருடைய டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோர் 248 ரன்களே உள்ளது.

- Advertisement -

ஆனால் இவருடன் விளையாடிய வீரர்களான சங்கக்காரா 11 இரட்டை சதம், லாரா 9 இரட்டை சதம் எடுத்துள்ளனர். மேலும் முறையே அவர்கள் அதிகப்பட்ச ரன்களாக 375 மற்றும் 400 ரன்களை அடித்துள்ளனர். அதேபோன்று தற்போது அடுத்த சச்சின் பாராட்டப்படும் கோலியே இதுவரை ஆறு இரட்டை சதங்களை அடித்துள்ளார். இதன் காரணமாக கபில்தேவ் சச்சினை இவ்வாறு பேசியுள்ளார்.

இருப்பினும் கபில் தேவின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் யாரும் செய்ய முடியாத சாதனையாக இருந்த 200 ரன்களை ஒருநாள் போட்டியில் முதன்முதலில் அடித்து காட்டியது சச்சின்தான் அவரைப்பற்றி இதுபோன்று பேசுவது தவறானது என்று பகிர்ந்து வருகின்றனர்.