புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையிலான குழுவை பிசிசிஐ நியமித்துள்ளது. கபில்தேவ் தலைமையிலான இந்தக் குழு புதிய பயிற்சியாளரை நேர்காணல் செய்து பி.சி.சி.ஐ க்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் கபில்தேவ் இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்தும், ரோகித் கோலி பிளவு குறித்தும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி அடைந்த பிறகு இந்திய அணியில் பிளவு ஏற்பட்டதாகவும், மேலும் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தனியாக பிரிந்து அவர்களுக்கு ஆதரவாக சில வீரர்கள் செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் கேப்டன்ஷிப்பில் மாற்றம் ஏற்படும் என்று புதுப்புது செய்திகள் வந்தன.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி மீண்டும் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக மாறி மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதனை தொடர்ந்து ரோஹித் நான் அணிக்காக மட்டும் ஆடவில்லை நாட்டுக்காக ஆடுகிறேன் என்று சூசகமாக பதிலையும் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சூழல் குறித்து பேசிய கபில்தேவ் கூறியதாவது :

களத்துக்கு வெளியே கோலி ரோஹித் ஆகியோர் கருத்து வேறுபாடு இருக்கலாம், அவர்களின் செயல்பாடும் வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் களத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையே நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் களத்துக்கு வெளியே வீரர்கள் எப்படி இருந்தாலும் களத்தில் வந்து விளையாடும் பொழுது வெற்றியை ஒன்றே அவர்கள் இலக்காக வைத்து விளையாட வேண்டும்.

அந்த அணுகுமுறையை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள். எனவே அணியின் தற்போதைய தேவை இந்திய அணியின் மேம்பாடு மட்டுமே. அது குறித்து மட்டுமே நாம் பேசவேண்டும் மற்றபடி பேச எதுவும் இல்லை. கருத்து வேறுபாடு குறித்து யாரும் பேச வேண்டாம் இது போன்ற நிலைமை வருவது சகஜம் தான். விரைவில் இந்திய அணி மீண்டும் நல்ல நிலைக்கு மாறும் என்று கபில் தேவ் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



