
இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றுள்ளது. அந்த தோல்விகளுக்கு மோசமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணி ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளாததும் காரணமானது.
மேலும் ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டை இழந்ததும் தோல்வியைக் கொடுத்தது. இந்நிலையில் பணத்துக்காக பிசிசிஐ இந்திய வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாட வைப்பது இந்த தோல்விகளுக்கு காரணமாவதாக ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதே சமயம் டிராவிட் போல தற்போதைய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு பொறுமையான வீரர்கள் இல்லையென்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “இப்போதெல்லாம் நாம் அதிகப்படியான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். அதன் காரணமாக எப்போதாவது மட்டுமே பவுலர்களுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடும் வாய்ப்பை பேட்ஸ்மேன்கள் பெறுகிறார்கள். வேகம் மற்றும் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் அசத்துவதற்கு உங்களுக்கு பொறுமை மற்றும் வித்தியாசமான திறன் தேவை”
“ஆனால் அந்த பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்த ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பேட்ஸ்மேன்கள் உங்களிடம் இல்லை. வேகத்தை விட சுழல் பந்துகளை எதிர்கொள்ள உங்களுக்கு சிறந்த திறமை தேவை. ஆனால் அது பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து அமையும். வேகம் அல்லது சுழல் அதிகப்படியானதாக இருந்தால் அதை எதிர்கொள்வது கடினமாகும். அங்கே உங்களுக்கு ஃபுட்வொர்க் முக்கிய உதவி செய்யும் என்பதை மறக்காதீர்கள்”
“அங்கே நீங்கள் ரிசப் பண்ட் போல அதிரடியாக விளையாட முயற்சிப்பது வித்தியாசமானது. ரிஷப் பண்ட் போன்றவரிடம் நீங்கள் மெதுவாக விளையாடுமாறு சொல்ல முடியாது. மேட்ச் வின்னரான அவரால் 100 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் எடுக்க முடியாது. அவர் சிக்ஸர் அடிக்கும் போது அனைவரும் கொண்டாடுகிறார்கள். யாராவது அவரை சிக்ஸர் அடிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா? அவர் எதிரணியை அடித்து நொறுக்கக்கூடிய பேட்ஸ்மேன்”
இதையும் படிங்க: கம்பீரின் இந்த முடிவு ரொம்ப தப்பு.. இந்திய வீரர்கள் உள்ளூரை மதிக்காததே தோல்விக்கு காரணம்.. கபில் தேவ்
“இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்திடம் தோற்றது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நாம் இன்னும் நன்றாக தயாராகியிருக்க வேண்டும். என்னைப் போன்றவரை பொறுமையாக விளையாடுமாறு சொன்னால் அது நடக்காது. ஆனால் ரவி சாஸ்திரி, அமர்நாத் சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் நாள் முழுவதும் நின்று விளையாடுவார்கள். ஏனெனில் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள அவர்களிடம் பொறுமை இருக்கிறது” என்று கூறினார்.