ரொம்பவும் ஸ்ட்ரிக்டா இருக்காதீங்க.. பிசிசிஐக்கு எதிராக பேசிய விராட் கோலிக்கு கபில் தேவ் ஆதரவு கருத்து

Kapil Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதிலும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து இந்தியா மோசமான அவமான சாதனையை படைத்தது. அதே போல ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது.

அதனால் கடுப்பான பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் மிகுந்த 10 விதிமுறைகளை வெளியிட்டது. குறிப்பாக அனைத்து வீரர்களும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கி ஒன்றாகப் பயிற்சி எடுத்து விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் வெளிநாட்டில் நடைபெறும் பெரிய தொடர்களின் போது வீரர்களுடன் குடும்பம் பயணிப்பதற்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.

- Advertisement -

பிசிசிஐ விதிமுறை:

இந்த விதிமுறைகளை விதித்த பிசிசிஐ அதை மீறுபவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இருப்பினும் அதற்கு நிறைய இந்திய வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக பெரிய வெளிநாட்டு தொடர்களில் குடும்பங்கள் அருகில் இல்லாதது மனதளவில் சொல்ல முடியாத கடினத்தை ஏற்படுத்தும் என்று விராட் கோலி தெரிவித்தார்.

இந்நிலையில் விராட் கோலி சொல்வது போல வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்களுடன் குடும்பங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். அதே சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே குடும்பங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கபில் தேவ் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கபில் தேவ் கருத்து:

“இது பற்றி எனக்குத் தெரியாது. அது நமது வாரியம் எடுத்துள்ள முடிவு. அதே சமயம் எனது பார்வையில் ஆம் உங்களுக்கு குடும்பத்தின் ஆதரவு தேவை. ஆனால் நீங்கள் அனைத்து நேரங்களிலும் அணியாக இருப்பதும் அவசியம். எங்களுடைய காலங்களில் இதை வாரியம் தெரிவிக்காது. எங்களுக்கு நாங்களே தெரிவித்துக் கொள்வோம்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்.. குட்டி மலிங்காவை விளாசிய தல தோனி.. ரசிகர்கள் உற்சாகம்

“அதாவது ஒரு தொடரின் முதல் பகுதியில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது பகுதியில் குடும்பங்களும் வந்து கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். அது கலவையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அப்படி வீரர்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் குடும்பங்கள் பற்றிய விதிமுறையில் மட்டும் பிசிசிஐ மாற்றம் செய்ய உள்ளதாக செய்திகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement