இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஹரியானாவைச் சேர்ந்த அன்சுல் கம்போஜ் அறிமுகமாக களமிறங்கினார். கடந்த சில வருடங்களாக உள்ளூரில் சிறப்பாக விளையாடிய அவர் கேரளாவுக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
அதே போல ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக கணிசமாக அசத்திய அவரை ஒரு முறை தோனி பாராட்டினார். அதனால் சிறப்பாக பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். அதனால் 18 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த அவர் 89 ரன்களை 4.90 என்ற எக்கனாமியில் வாரி வழங்கினார்.
10 விக்கெட்ஸ் எடுப்பாரா:
மேலும் 125 – 130 கி.மீ என்ற மிதவேகத்தில் பவுலிங் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருந்த மாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் கம்போஜ் அறிமுகப் போட்டியிலேயே 10 விக்கெட்டுகள் எடுப்பார் என்று நினைத்தீர்களா? என ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஒரு வீரரின் திறமையை ஆராய்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்தவரா என்பதைக் கண்டறிந்த பின்பே வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் பயிற்சியாளர் கெளதம் கம்பீரை மறைமுகமாக சாடியுள்ளார்.
மேலும் அனைவரும் ஆரம்பத்திலேயே அசத்த மாட்டார்கள் என்றும் கபில் தேவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அறிமுக வீரரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? 10 விக்கெட்டுகள் எடுப்பார் என்று எதிர்பார்ப்பீர்களா? முதலில் நீங்கள் அவருடைய திறமையைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை திறமை அவரிடம் இருந்தால் கம்பேக் கொடுப்பார்”
கபில் தேவ் பதிலடி:
“தங்களுடைய முதல் போட்டியில் விளையாடும் அனைவரும் பதற்றமாக இருப்பார்கள். அதனால் முடிவு எதிர்பார்த்ததாக இருக்காது. ஆனால் அங்கே திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அதுவே முக்கியம். சுப்மன் கில்லுக்கு கூட நீங்கள் நேரத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் கேப்டனாக இது அவருடைய முதல் தொடர். ஒரு சில தவறுகளை செய்தாலும் வருங்காலங்களில் அவரை நோக்கி நிறைய நேர்மறை விஷயங்கள் வரும்”
இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் விட ஜடேஜா தான் பெஸ்ட்.. பும்ரா இப்போவும் இதை செய்றதுக்கு தலை வணங்குறேன்.. கபில் தேவ்
“ஒருவேளை அவர் கற்றுக்கொண்டால் அதில் பிரச்சனையில்லை. தவறு செய்வதில் தவறில்லை. ஆனால் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே முக்கியம். இது மிகவும் இளமையான அணி. எனவே அவர்கள் தங்களை அட்ஜஸ்ட் செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். கில் புதிய கேப்டன். இது அவருக்கு பாடங்களைப் படிக்கும் படியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



