
ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிகளுக்கு பந்து வீச்சுத் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 119 ரன்களை கட்டுப்படுத்தும் போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதனால் தற்சமயத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பும்ரா உலகின் தலைசிறந்த பவுலராக செயல்பட்டு வருவதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டினார்.
கபில் தேவ் பாராட்டு:
மேலும் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களின் மனதில் பயத்தை விதைத்துள்ளதாக ஜாம்பவான் வக்கார் யூனிஸ் பாராட்டினார். இந்நிலையில் குறைந்த தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசுவதால் பும்ராவின் தோள்பட்டையிலும் உடலிலும் அதிகப்படியான அழுத்தமும் வலியும் ஏற்படும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதனாலேயே 2022இல் அவர் மிகப்பெரிய காயத்தை சந்தித்ததாகவும் கபில் தேவ் கூறியுள்ளார்.
அதனால் பும்ராவால் நீண்ட காலம் விளையாட முடியாது என்று தாம் உட்பட பலரும் நினைத்ததாக கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஆனால் அதே பவுலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு தம்மால் உலகின் சிறந்த பவுலராக வர முடியும் என்பதை தற்போது பும்ரா நிரூபித்துள்ளதாக கபில் தேவ் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரால் நிறைய கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று நாம் நினைக்கவில்லை”
“அது மிகவும் கடினம் என்று நாம் கருதினோம். ஏனெனில் மிகவும் குறைந்த தூரத்தில் ஓடி வந்து பந்து வீசும் பவுலிங் ஆக்சன் அவருடைய உடலிலும் தோள்பட்டைகளிலும் அதிகப்படியான அழுத்தத்தை போடும். ஆனால் நாம் அனைவரையும் தவறு என்று நிரூபித்துள்ள அவர் இந்த ஆக்சனை வைத்துக்கொண்டே தன்னை உலகின் சிறந்த பவுலராக வந்து காட்டுகிறேன் என்பதை நிரூபித்துள்ளார். இதற்காக சில நேரங்களில் நீங்கள் விலையை கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய அணியில் இருக்கும் சூரியகுமார் யாதவ் எனக்கு நெருங்கிய நண்பர் – அமெரிக்க வீரர் பகிர்ந்த சுவாரசிய தகவல்
“இருப்பினும் அதை காயத்தை கொடுத்து சந்திக்கும் போது கடினமாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2022இல் சந்தித்த மிகப்பெரிய காயத்தால் நீண்ட காலம் விளையாடுவதற்கு ஒன்று பும்ரா ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் அல்லது தன்னுடைய ஆக்சனை மாற்ற வேண்டும் என்று சோயப் அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி பும்ரா மீண்டும் சாதித்து காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.