வீடியோ : ராஸ் டெய்லரை முந்திய கேன் வில்லியம்சன் புதிய வரலாற்று சாதனை – இங்கிலாந்தை சாய்க்க போராடும் நியூஸிலாந்து

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தங்களது வழக்கமான அதிரடி அணுகு முறையில் மிரட்டலாக செயல்பட்ட இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹரி ப்ரூக் அதிரடியாக விளையாடி சதமடித்து 186 (176) ரன்களும் நிதானத்தை காட்டிய ஜோ ரூட் சதமடித்து 153* (224) ரன்களும் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 435/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்ட் ஹென்றி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து இங்கிலாந்து பவுலர்களின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 209 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.

- Advertisement -

போராடும் நியூஸிலாந்து:
அதிகபட்சமாக 9வது இடத்தில் களமிறங்கி ஆனதாகட்டும் என்ற வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த கேப்டன் டிம் சவுதி 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 73 (49) ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூல் பிராட் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதை தொடர்ந்து பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்தை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு இங்கிலாந்து கேட்டுக் கொண்டதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு இம்முறை பொறுப்புடன் செயல்பட்டு 149 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டேவோன் கான்வே 61 ரன்களும் டாம் லாதம் 83 ரன்களும் குவித்து அடுத்தடுத்த இடைவெளியில் அவுட்டானார்கள்.

அப்போது வந்த வில் எங் 8, ஹென்றி நிக்கோலஸ் 29 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் பாலோ ஆன் பெற்ற தன்னுடைய அணியை பொறுமையின் சிகரமாக நங்கூரத்தை போட்டு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக 29 ரன்கள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற ராஸ் டெய்லர் சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. கேன் வில்லியம்சன் : 7787* (161 இன்னிங்ஸ்)
2. ராஸ் டெய்லர் : 7683 (196 இன்னிங்ஸ்)
3. ஸ்டீபன் பிளெமிங் : 7172 (189 இன்னிங்ஸ்)

கடந்த 2010இல் அறிமுகமாகி விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்காக அதிக சதங்கள், அதிக அரை சதங்கள், அதிக சராசரி, அதிக இரட்டை சதங்கள் ஆகிய சாதனைகளை படைத்துள்ள நிலையில் தற்போது மற்றுமொரு புதிய சாதனை படைத்துள்ளார். தன்னுடைய சாதனை தகர்த்த அவரை ராஸ் டெய்லர் மனதார ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அவருக்கு கை கொடுக்க முயன்ற டார்ல் மிட்சேல் 54 (54) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த டாம் ப்ளண்டலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் 6வது 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து காப்பாற்றினார். தொடர்ந்து அசத்திய இந்த ஜோடியால் நியூசிலாந்து முன்னிலை பெற துவங்கிய போது டாம் ப்ளெண்டல் துரதிஷ்டவசமாக 90 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் மிகச் சிறப்பாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் 12 பவுண்டரியுடன் 132 (282) ரன்கள் விளாசி போராடி அவுட்டானார்.

அவரது சிறந்த ஆட்டத்தால் ஓரளவு தப்பிய நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ் போராடி 483 ரன்களுக்கு அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 258 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 48/1 என்ற நிலையுடன் விளையாடி வருகிறது. ஜாக் கிராவ்லி 24 (30) ரன்களில் அவுட்டானாலும் களத்தில் பென் டூக்கெட் 23* (29) இருக்கும் நிலையில் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.

இதையும் படிங்க: அவரோட எனக்கு பிரச்சனை இருக்கு தான். ஆனா நாட்டுக்காக ஆடும்போது அதை மறந்துடுவேன் – தமீம் இக்பால் பேட்டி

அதனால் ஏற்கனவே அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து கடைசி நாளில் மேற்கொண்டு 210 ரன்களை எடுத்து வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதை தடுத்து வெற்றி பெற சொந்த மண்ணில் நியூசிலாந்து போராட உள்ளது.

Advertisement