
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் தற்சமயத்தில் அந்த அணி கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அந்தத் தொடரின் இரண்டாவது போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சி நகரில் துவங்குகிறது. ஆனால் அந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் முக்கிய போட்டிகள் கராச்சியில் நடைபெறுகிறது. எனவே அதற்கு மைதானத்தை புதுப்பிக்க வேண்டிய வேலை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது.
காமெடி பீஸ்:
இந்நிலையில் இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானை நகைச்சுவையாக காட்சிப்படுத்துவதாக முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தங்கள் நாட்டு வாரியத்தை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற உள்ளது. அங்கே சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாரவதற்காக புதுப்பிக்கும் வேலைகள் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்”
“ஆனால் அதற்காக பாகிஸ்தானில் ரசிகர்கள் இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறப் போகும் நகைச்சுவை அரங்கேற உள்ளது. நம்மிடம் 2 – 3 மைதானங்கள் கூட தயாராக இல்லை. நம்மிடம் ஃபைசலாபாத் நகரில் ஒரு மைதானம் உள்ளது. அங்கே வரலாற்றில் நிறைய போட்டிகள் நடைபெற்றுள்ளன. அது போக முல்தான் நகரில் நல்ல மைதானம் இருக்கிறது. எனவே 2வது போட்டியை இந்த 2 மைதானங்களில் ஏதேனும் ஒன்றில் நடத்தி இருந்தால் ரசிகர்கள் வந்திருப்பார்கள்”
“ஆனால் அதை செய்யாத நீங்கள் சர்வதேச அரங்கில் நம்முடைய கிரிக்கெட்டை நகைச்சுவையாக மாற்றியுள்ளீர்கள். இது போன்ற விஷயங்கள் நடக்கக் கூடாது. இது போன்ற விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது போன்ற முடிவுகளை நீங்கள் எடுத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் நகைச்சுவையாக மாறிவிடும். இது போன்ற விஷயங்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிச்ச இலங்கையால் அதுவும் முடியும்.. அதுக்கு எங்க ரூட்ல விளையாடனும்.. டீ சில்வா அறிவுரை
“யார் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது பற்றி பாகிஸ்தான் வாரிய தலைவர் கேட்க வேண்டும். ஏனெனில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றால் அதில் பார்ப்பதற்கு என்ன ஆர்வமாக இருக்கும்? ஏற்கனவே நமது ரசிகர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இப்படியே போனால் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்.