
நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றிற்கான வாய்ப்பை உறுதி செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி லீக் சுற்றில் எஞ்சியுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களை இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தாலும் அடுத்த சுற்றுக்கு நல்ல தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியையும் வெற்றி பெறும் நோக்கில் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத தமிழக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் முகமது கைப் கூறியதாவது : தற்போதைய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், மைக்கல் பிரேஸ்வெல், மிட்சல் சான்ட்னர் போன்ற வீரர்கள் இடது கை ஆட்டக்காரராக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒரு ஆப் ஸ்பின்னர் இருந்தால் நிச்சயம் சவால் அளிக்க முடியும்.
அந்த வகையில் நாம் வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்கும் போது அவர்களுக்கு எதிராக பந்துவீச வைக்கலாம். வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு திறமையான இளம் வீரருக்கு இது ஒரு சோதனையாக இருக்கும். எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உண்மையில் நான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலக இதுதான் காரணம் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி
அவர் கூறியது போன்றே இந்திய அணியில் தற்போது இடம் பிடித்து விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பதால் ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.