2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த அதிநவீன கேமராக்கள் மூலம் இந்த காட்சிகள் பதிவானதால் ஐசிசி இவர்களை விசாரித்து, இருவருக்கும் தலா 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. களத்தில் வைத்த பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.
இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்சும் டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். தங்களது தடை காலம் முடிவடைந்து ஆஸ்திரேலிய அணியில் இணைந்த வார்னர் மற்றும் ஸ்மித் உலக கோப்பை தொடரில் பங்குபெற்றனர்.
உலக கோப்பை தொடரில் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் தனது திறமையை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தனது கேப்டன் பதவியை மீண்டும் கொடுக்கவில்லை. டிம் பெய்ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது பல தோல்விகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டிம் பெய்ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கண்டிப்பாக நீக்கப்படுவார் என்று உறுதியாக கூறும் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப். அவர் கூறுகையில் : “ டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன் டிம் பெய்ன் அணியில் இருந்து நீக்கப்படுவார். இவரது பேட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத போது வேறு வழியில்லாமல் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் மீண்டும் அணியில் இடம்பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த தொடர் முடிவடைந்தவுடன் கண்டிப்பாக நீக்கப்படுவார்” என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். டிம் பெய்ன் கேப்டனாக இருந்தபோது தான் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.