
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 147 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில், கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது ரசிகர்களை சோகமடைய வைத்தது.
அப்போது நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா 69* ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார். அவருடன் சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோரும் முக்கிய ரன்கள் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை 3வது முறையாக தோற்கடிக்க உதவியினர். முன்னதாக அந்தத் தொடரில் கேப்டன் சூரியகுமார் 0, 5, 12, 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அந்த வகையில் ஆசியக் கோப்பையில் அவர் ஒரு அஞ்சலகத்தின் எண் (ஃபின்கோட்) போல பேட்டிங் செய்து தமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அதே போல துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓப்பனிங்கில் களமிறங்கிய சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியில் வீரர்களின் தேர்வு அடிப்படையில் சில குறைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே 2026 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு தற்போதைய அணி போதாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் என்னை ஏமாற்றினார். இப்போதெல்லாம் அவருடைய ஸ்கோர்கள் ஃபின்கோட் போல இருக்கிறது”
“சொல்லப்போனால் இரு அணிகளின் பேட்டிங் வரிசை பின்கோட் போல இருந்தது. ஆனால் பாகிஸ்தான் ஸ்கோர் மோசமாக இருந்தது. சூரியகுமாருடன் சுப்மன் கில் ஃபார்மும் கவலையளிப்பதாக இருக்கிறது. சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் கொடிய பேட்ஸ்மனை போல் தெரியவில்லை. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை வரும் சூழ்நிலையில் அவர்கள் அவரை வைத்து என்ன செய்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: இதான் இந்தியா – பாகிஸ்தானுக்கு உள்ள வித்தியாசம்.. ஜென்டில்மேன்ஷிப் பற்றி கேப்டன் சூரியகுமார் பேட்டி
“ஏனெனில் என்னுடைய அணியில் அவருக்கு இடமில்லை. ஆனால் அவரை அவர்கள் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தற்போதைய அணி டி20 உலகக் கோப்பைக்கு சரியானதாக தெரியவில்லை. ஆசியக் கோப்பையில் வெல்வதற்கு சராசரிக்கும் குறைவான அணி போதுமானது. ஆனால் இதே அணியுடன் நாம் டி20 உலகக் கோப்பையில் விளையாடினால் பின்னடைவுகள் ஏற்படலாம்” என்று சொன்னார்.