ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதை விட சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் இருந்தே தடுமாறி வரும் அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இல்லை. இந்நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் கடுமையாக பேசியது பின்வருமாறு.
அநியாய தேர்வு:
“சுப்மன் கில்லை திடீரென துணை கேப்டன் என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்பாக அவருடைய புள்ளிவிவரங்களை நான் பார்த்தேன். அதில் ஒரு புடலங்காயும் இல்லை. 6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஸ்கோர். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டிய காரணம் என்ன”
“நல்லவேளை ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார். இலங்கைக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் உட்பட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. அவர்களையெல்லாம் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ள நீங்கள் சாம்சன் போன்றவரை எடுக்கவில்லை”
சீக்கா விளாசல்:
“சுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறீர்கள். அவரை விட திறமையான நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன் இருக்கிறார். அதே போல இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சஞ்சு சாம்சனை நான் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்ய ஆதரவு கொடுப்பேன். கில் என்ன செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள்”
இதையும் படிங்க: இது துபாய்க்கு தகுந்த இந்திய அணி இல்லை.. அதுல 4 பேர் எதுக்கு? சிராஜ் இருந்துருக்கனும்.. சித்து பேட்டி
“ஆனால் சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? ஆஸ்திரேலிய மண்ணில் நித்திஷ் ரெட்டி சிறப்பாக விளையாடியதால் ஹீரோ போல காண்பித்தீர்கள். தற்போது இத்தொடரில் தகுதி இருந்தும் தேர்வு செய்யாத நீங்கள் அவரை திடீரென கீழே போட்டுள்ளீர்கள். ஆனால் சுப்மன் கில் இன்றியமையாதவர் என்று சொல்லி துணை கேப்டனாக நியமித்துள்ளது எனக்கு நியாயமாக தெரியவில்லை. பும்ரா துணை கேப்டனாக இல்லாததும் எனக்கு புரியவில்லை” எனக் கூறினார்.



