இந்த செலக்சன் வெச்சு ஆசிய கோப்பை ஜெயிச்சாலும் உ.கோ முடியாது.. அந்த 3 பேரை எதுக்கு எடுத்தீங்க? ஸ்ரீகாந்த் விளாசல்

K Srikkanth
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது பலரையும் கோபமடைய வைத்தது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 2023 ஆசிய கோப்பையில் சதத்தை அடித்து தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் அலி கோப்பைகளை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அத்துடன் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவருக்கு ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுபுறம் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிப்பதற்கு தடுமாறினார்.

- Advertisement -

ஆசிய கோப்பை மட்டுமே:

இருப்பினும் வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக அவரை இப்போதே தேர்வுக் குழுவினர் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு “யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸை எடுக்கலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்?” என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்தார். இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இப்படிப்பட்ட செலக்சனை வைத்துக்கொண்டு இந்தியா ஆசிய கோப்பையை வெல்லலாம், ஆனால் 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்றும் ஸ்ரீகாந்த் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:

“இந்த அணியை வைத்து நாம் ஆசியக் கோப்பையை வெல்லலாம். ஆனால் இந்த தேர்வை வைத்துக்கொண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை. இந்த அணியை நீங்கள் உலகக் கோப்பைக்கு எடுத்துச் செல்வீர்களா? 6 மாத தொலைவில் இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு நீங்கள் இப்படித்தான் தயாராகுவீர்களா? தேர்வுக் குழுவினர் பின்னோக்கி நடந்துள்ளார்கள்”

இதையும் படிங்க: பிசிசிஐயுடன் சேர்ந்து ஐசிசியும்.. விராட், ரோஹித் ரிட்டையராக்க சதி செய்கிறதா? ரசிகர்கள் விளாசல்.. நடந்தது என்ன?

“அக்சர் படேல் துணைக் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் எப்படி வந்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ஐபிஎல் தான் தேர்வுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த அணி கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பிருந்த சூழ்நிலைகளை மையப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது” எனக் கூறினார்.

Advertisement