இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒய்ட்வாஷ் அவமானத் தோல்வியை தவிர்த்தது. அந்தப் போட்டியில் பேட்டிங் துறையில் வெற்றி பெறுவதற்கு ரோஹித் சர்மா 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர்.
அதனால் 2027 உலகக் கோப்பையிலிருந்து தங்களை கழற்றி விட முயற்சிக்கும் தேர்வுக்குழுவிற்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அதே போல கடுமையான விமர்சனங்களை சந்தித்த ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார்.
அசத்திய ராணா:
அதற்காக பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கௌதம் கம்பீர் 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் சுமாராக விளையாடிய ராணாவை பலரும் விமர்சித்தனர். குறிப்பாக ராணா எதற்காக இந்திய அணியில் இருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியவில்லை என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
அத்துடன் கம்பீருக்கு ஆமாம் போடுபவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைப்பதாகவும் ஸ்ரீகாந்த் விமர்சித்தார். அதற்கு என்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள், 23 வயது குழந்தையை விமர்சிக்காதீர்கள் என்று ஸ்ரீகாந்துக்கு பதிலடி கொடுத்த கம்பீர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் முக்கியமான 24* ரன்கள் எடுத்த ராணா கடைசிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
பாராட்டிய ஸ்ரீகாந்த்:
இந்நிலையில் ராணா கடைசி போட்டியில் டெத் ஓவர்களில் அசத்தியதாக ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று ராணா அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர். அவருக்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆம் நான் உங்களை நிறைய விமர்சித்தேன். ஆனால் நாளின் இறுதியில் நீங்கள் அசத்தியுள்ளீர்கள். கடந்தப் போட்டியில் பேட்டிங்கில் அடித்த முக்கிய ரன்கள் மற்றும் முதல் ஸ்பெல் பவுலிங் ஆகியவற்றால் அவர் மீண்டும் தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளார்”
இதையும் படிங்க: வேணாம்ன்னு சொல்லியும்.. ரோஹித் தான் எனக்கு அந்த விக்கெட்டை எடுத்து கொடுத்தாரு.. ப்ளானை பகிர்ந்த ராணா
“இதே போல அசத்தும் போது அவருடைய தன்னம்பிக்கை இன்னும் வளரும். இன்று தன்னம்பிக்கை மிக்க பவுலராக பந்து வீசி 4 விக்கெட்டுகள் எடுத்தது அவருக்கு மிகப்பெரிய சாதனை. அவர் எடுத்ததில் ரோஹித் கேட்ச் பிடித்த ஓவன் விக்கெட் எனக்குப் பிடித்தது. கடந்தப் போட்டியில் டெத் ஓவரில் அடி வாங்கிய அவர் இப்போட்டியில் அங்கேயும் அசத்தினார். இன்று அவர் அதிகம் ஷார்ட், ஸ்லோ பந்துகளைப் போடவில்லை” என்று கூறினார்.



