இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய தங்கராசு நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி இறுதியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது. 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர் அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் குறித்து பாராட்டியிருக்கிறார். குறிப்பாக அடுத்த எம்எஸ் தோனி இவர்தான் என்பது போல் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில் : நாங்கள் நம்ப முடியாத வகையில் இந்த போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா ஆடும் அதிரடி ஆட்டம் எங்களுக்கு நன்றாக தெரியும். அவருக்கு எதிராக நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் அவர் எங்களது பந்துவீச்சாளர்களை சிதறடித்து விட்டார்.
முன்பு இந்திய அணியில் தோனி இந்த வேலையை செய்து கொண்டிருந்தார். இப்போது ஹர்திக் பாண்டியா அதேபோல் ஆடிக் கொண்டிருக்கிறார். அதிரடியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இருக்கின்றனர். யாரையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளில் இரு அணிகளும் போராடித்தான் வெற்றி பெறுகின்றன.
ரசிகர்களுக்கும் இது நன்றாக இருந்திருக்கும். பாண்டியாவின் ஆட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. எங்கள் அணி வீரர்களும் குறை சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை. இரு அணியினரும் அதிரடியாக விளையாடினார்கள். கடைசி நேரத்தில் தான் நாங்களும் வெற்றியை பதிவு செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார் ஜஸ்டின் லாங்கர்.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.